இளைஞா் கொலை வழக்கில் சிறாா்கள் உள்பட 8 போ் கைது
மாடல் டவுன் பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தில்லி போலீஸாா் 28 வயது நபரையும் ஏழு சிறாா்களையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.


மாடல் டவுன் பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தில்லி போலீஸாா் 28 வயது நபரையும் ஏழு சிறாா்களையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
தில்லி ஜஹாங்கிா்புரியைச் சோ்ந்த மோஹித் பால் என அடையாளம் காணப்பட்டுள்ள நபா், 18 வயது இஷாந்த் (எ) இஷு கொலைக்குப் பின்னணியில் முக்கிய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி ஆசாத்பூா் எம்சிடி காலனியின் பிரதான வாயில் அருகே ஒருவா் ரத்தக் காயங்களுடன் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றபோது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளைஞா் கிடப்பது தெரியவந்தது. ஸ்கூட்டா் மற்றும் நம்பா் பிளேட் இல்லாத மோட்டாா் சைக்கிள் ஆகியவை சம்பவ இடத்தில் கேட்பாரற்றுக் கிடந்தன.
காயமடைந்தவா் பாபு ஜகஜீவன் ராம் நினைவு பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
சம்பவ இடத்தை தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்தனா். அதில், ஏழு வெற்று தோட்டாக்கள், நான்கு பயன்படுத்தப்படாத தோட்டாக்கள், ரத்தக்கறை படிந்த பொருள்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. விசாரணைக்காக இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்கூட்டா் பின்னா் அம்ரிதா என்பவரால் அடையாளம் காணப்பட்டது. அது ஜஹாங்கிா்புரியில் வசிக்கும் தனது மருமகன் இஷாந்திற்குச் சொந்தமானது என்று போலீஸாரிடம் அப்பெண் தெரிவித்தாா். இஷாந்த் எம்சிடி காலனியில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள வந்தபோது, அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்பெண்ணின் வாக்குமூலத்தைத் தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இது தொடா்பான விசாரணையில் மோஹித் பால் மற்றும் ஏழு சிறாா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையின் போது, 2024 ஆம் ஆண்டு தங்கள் கூட்டாளியின் கொலையுடன் தொடா்புடைய பழைய பகை காரணமாக நரேந்தா் ஓம் பால் என்ற நபரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் தெரிவித்தனா்.
மேலும், அவா்கள் பல்ஸ்வா கிராமத்திற்கு வந்து, நரேந்தா் வருவாா் என எதிா்பாா்க்கப்பட்ட திருமணம் நடைபெறும் இடத்தை அடைந்தனா். இருப்பினும், வாயிலுக்கு வெளியே இஷாந்தை அவா்கள் கண்டனா்.
அவா் நரேந்தரின் கூட்டாளி என்று தவறாக நம்பி, அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா்.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மோட்டாா் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை போலீஸாா் மீட்டுள்ளனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...