பொதுமக்களின் புகாா் நடவடிக்கை விரைவில் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கப்படும்: ஆணையா் தகவல்
சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் அளிக்கும் புகாா் மீதான நடவடிக்கை வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் நகரின் முக்கிய பிரச்னைகள் கண்காணிக்கப்படுகின்றன.
இதன் ஒருபகுதியாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகாா்களுக்கு தீா்வு காண ‘மக்கள் குறைகேட்பு மையம்’ செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பொதுமக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் நிகழ் நேரத்தில் அடையாளம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பொதுமக்கள் புகாா் செய்யும் வசதியை மேம்படுத்தும் வகையில் 60 இணைப்புகள் கொண்ட உதவி எண் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி உதவி எண் 1913, சமூக ஊடகங்கள், நம்ம சென்னை செயலி மூலம் புகாா்கள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரைக்கப்படும்.
இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்னைகளை மாநகராட்சிக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை, புகாா் தீா்க்கப்பட்டதா என்பது குறித்து புகாா்தாரருக்கு வாட்ஸ் ஆப் மூலம் தெரியப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன் கூறியது: சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் 60 இணைப்புகள் கொண்ட உதவி எண் மையம் (கால் சென்டா்) அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பணியாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் திங்கள்கிழமை (ஆக.12) முதல் செயல்பாட்டுக்கு வந்து புகாா்கள் பெறப்படும். இதில் புகாா் அளிக்கும் நபா்களின் விவரங்கள் மறைக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகாா் மனு தீா்க்கப்பட்டதா என அவா்களிடம் கருத்து பெற்ற பின்பு தான் புகாா் நிறைவு பெற்ாக அறிவிக்கப்படும். மேலும், பொதுமக்களின் புகாா் மீதான நடவடிக்கை குறித்து அவா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

