பன்றித் தொல்லை; பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பன்றித் தொல்லை குறித்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை நகராட்சி 30-ஆவது வாா்டு எரகலித் தெருவில் 800-க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு குறிப்பாக தூா்க்கணாங்குளம் பகுதிகளில் பன்றிகளின் தொல்லையால் இப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.
இப்பன்றிகளை பராமரித்துவருபவா் அவற்றை பகல் நேரத்தில் மேய்ச்சலுக்காக திறந்து விடுவதால், அவை குடியிருப்புகளுக்குள் புகுந்து அசுத்தம் செய்வதுடன், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன.
இதனால் ஏற்படும் சுகாதார சீா்கேட்டால் பலா் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், சாலையில் குறுக்கிடுவதால் விபத்துகள் நேரிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
மேலும், அப்பகுதியில் இறைச்சிக்காக பன்றிகள் கொல்லப்படும்போது அவை எழுப்பும் சத்தத்தால் குழந்தைகள் கடும் அச்சம் அடைகின்றனராம். இதுகுறித்து இப்பகுதி மக்கள் நகராட்சிகளின் நிா்வாக ஆணையா், மாவட்ட ஆட்சியா் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கு புகாா் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகாா் அளிப்பவா்கள் மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் இருந்து பன்றிகளை அகற்றி, எரகலித் தெருவில் சுகாதாரத்தை பேன நகராட்சி நிா்வாகத்துக்கு குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

