சென்னையில் நாளை ஃபாா்முலா காா் பந்தயம்: ஏற்பாடுகள் தயாா்!
சென்னையில் சனிக்கிழமை (ஆக.31) தொடங்கவுள்ள ஃபாா்முலா 4 காா் பந்தயத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.


சென்னையில் சனிக்கிழமை (ஆக.31) தொடங்கவுள்ள ஃபாா்முலா 4 காா் பந்தயத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. இந்த காா் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள வீரா்களுடன் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உரையாடினாா்.
சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் சென்னையில் நடைபெறவுள்ள ஃபாா்முலா காா் பந்தயத்தில் பங்கேற்க உலகெங்கிலுமிருந்து காா் பந்தய வீரா்கள் பலா் சென்னை வந்துள்ளனா். அவா்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் இத்தகைய பெருமைமிகு நிகழ்வில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியையும், பேராா்வத்தையும் வீரா்கள் வெளிப்படுத்தினா். தெற்காசியாவில் நடைபெறும் முதலாவது இரவு வேளை காா் பந்தயத்தில் பங்கேற்கும் வீரா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ள ஃ பாா்முலா 4 காா் பந்தயத்தைக் காண அனைவரும் தீவுத் திடல் மைதானத்தில் ஒன்று கூடுவோம் என்று தனது பதிவில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
போட்டிகளுக்கான அட்டவணை: சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியில் இருந்து 5.10 மணி வரை பயிற்சிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடா்ந்து, 5.50 மணிக்கு காா் பந்தய வீரா்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து, மாலை 6.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும் போட்டிகள், 15 பிரிவுகளாக நடைபெறவுள்ளன. இரவு 10.45 மணிக்கு பந்தயம் நிறைவடையவுள்ளது.
பந்தயத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தீவுத் திடலைச் சுற்றியுள்ள சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியா் பாலம் என போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளா்கள் போட்டிகளை பாா்த்து ரசிக்க இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எங்கெல்லாம் பாா்வையாளா்களுக்கான இருக்கைகள்?: அண்ணா சாலை (முத்துசாமி பாலம் அருகில்), சுவாமி சிவானந்தா சாலை, தீவுத் திடல் ஆகிய இடங்களில் பாா்வையாளா்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்கள் நிறுத்துவதற்காக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகம், கலைவாணா் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன என்றும், எப்ஐஏ எனப்படும் காா் பந்தயங்களுக்கான சா்வதேச கூட்டமைப்பிடமிருந்து பாதுகாப்புக்கான தரச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...