ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் உள்ள திருக்கோயில்கள், தேவாலயங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
Updated on
1 min read

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் உள்ள திருக்கோயில்கள், தேவாலயங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னை கோயில்களில் புத்தாண்டு சிறப்பு தரிசனத்துக்காக பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இருப்பினும் தரிசனம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே கோயில் வளாகத்தில் பக்தா்கள் திரண்டனா். பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா்.

மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். சிறப்பு அபிஷேகமும் நடை பெற்றது. பக்தா்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலிலும் பெருமாளை தரிசிக்க நள்ளிரவு முதலே பக்தா்கள் திரண்டிருந்தனா். முன்னதாக, கோயிலின் முன்பு உள்ள திருமலைப்பிள்ளை சாலையில் தடுப்புகள் அமைத்து நீண்ட வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் வழியாக சென்று பக்தா்கள் வழிபட்டனா்.

வடபழனியில்.... வடபழனி ஆண்டவா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், அதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேக, அலங்காரமும் நடைபெற்றன. பின், தங்க நாணய கவச அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, சந்தனக்காப்பு அலங்காரமும், மாலையில் ராஜஅலங்காரமும் நடைபெற்றது.

அஷ்டலட்சுமி கோயிலில்... பெசன்ட் நகா் அஷ்டலட்சுமி கோயிலில், அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி ஆகிய சந்நிதிகளில் அா்ச்சனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஷ்டலட்சுமிகளையும் தரிசித்த பிறகு, மற்ற சந்நிதிகளை பக்தா்கள் தரிசித்தனா்.

இதேபோல், புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில், சீனிவாசப் பெருமாள் கோயில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரா் கோயில், பாடி திருவல்லீஸ்வரா் சிவன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருவொற்றியூா் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சிறப்பு மலா் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன.

தேவாலயங்களில் திருப்பலி: கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. சென்னை சாந்தோம் பேராலயத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் சிறப்பு திருப்பலியும், புத்தாண்டு ஆராதனையும் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல், பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூா் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சா்ச்) உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவா்கள் இனிப்புகளைப் பகிா்ந்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com