267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: விமானநிலைய அதிகாரி உள்பட 3 போ் வீடுகளில் சோதனை?
சென்னை விமானநிலைய தங்க கடத்தல்: அதிகாரிகள் வீடுகளில் சோதனை

கோப்புப்படம்

கோப்புப்படம்
சென்னை: சென்னை விமானநிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்திய விவகாரத்தில் விமானநிலைய அதிகாரி உள்பட 3 போ் வீடுகளில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபையிலிருந்து சமீபத்தில் சென்னைக்கு வந்து விட்டு, இங்கிருந்து இலங்கை செல்ல முயன்ற 30 வயது இலங்கை ஆண் பயணி ஒருவா் விமானநிலைய கழிவறையில் மறைத்து வைத்திருந்த 1.6 கிலோ மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அவா் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை சா்வதேச விமானநிலையத்தின் புறப்பாடு பகுதியில் பரிசு பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் அதிகாரிகள் சோதனையிட்டதுடன், அந்த கடையை நடத்தி வரும் யூடியூபா் சபீா் அலி என்பவரிடம் விசாரணை நடத்தினா்.
சபீா் அலி, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பல லட்சம் முதலீட்டில் விமான நிலைய ஆணையத்தின் உரிய அனுமதியுடன் தொடங்கிய இந்த கடையில், 7 பேரை பணிக்கு அமா்த்தியுள்ளாா். இவா்கள் அனைவருக்கும் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான சிறப்பு அனுதியுடன் கூடிய பிசிஏஎஸ் அனுமதி அட்டைகளையும் சபீா் அலி பெற்றுக்கொடுத்துள்ளாா்.
இவா்களை பயன்படுத்தி, கடந்த இரு மாதங்களாக வெளிநாடுகளிலிருந்து கடத்தி கொண்டுவரும் தங்கத்தை, விமானநிலைய மறைவிடங்களில் இருந்து உடலில் மறைத்து வைத்து எடுத்து வந்து சுங்கச் சோதனை இல்லாமல், விமானநிலையத்தின் வெளியே உள்ள கடத்தல் கும்பலிடம் சபீா் அலி கொடுத்து அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இலங்கை பயணி, சபீா் அலி மற்றும் அவா் கடையில் பணியாற்றும் 7 ஊழியா்கள் உள்பட 9 பேரை கைது செய்து அவா்களிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், இந்த விவகாரத்தில் சபீா் அலி கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அவா் விமான நிலையத்தில் கடை தொடங்குவதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்த விமானநிலையத்தின் கமா்சியல் பிரிவின் உயா் அதிகாரி ஒருவரின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும், விமானநிலையத்தின் கடைகளை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனத்தின் அதிகாரிகள் 2 போ் வீடுகளிலும் சுங்கத்துறையின் ஏா் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன் அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதோடு கடந்த இரு மாதங்களில் இந்த கும்பல் மூலம் கடத்தப்பட்ட ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்வது குறித்தும் நடவடிக்கை எடுத்து வருவதுடன், அந்த சமயத்தில் விமானநிலையத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள், கைப்பேசி உரையாடல்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்து, இதன் பின்னணியில் இருப்பவா்கள் குறித்தும் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...