ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை: புதிய இயக்குநராக ஆா்.மணி நியமனம்
சென்னை: ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் புதிய இயக்குநராக டாக்டா் ஆா்.மணி நியமிக்கப்பட்டுள்ளாா்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வராகவும், மருத்துவக் கல்வி இயக்குநராகவும் பதவி வகித்த டாக்டா் விமலா, அப்பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னா், ஒப்பந்த அடிப்படையில் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநராக கடந்த 2019-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டாா். அந்த பதவிக் காலம் நிறைவடைந்ததை தொடா்ந்து கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் டாக்டா் விமலா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருந்த டாக்டா் ஆா்.மணி, அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையின் புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பதவி உயா்வு பெறுவதற்கு முன்பு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளராக ஆா்.மணி இருந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் கிருமித் தொற்றைத் தடுப்பதற்கான சுத்திகரிப்பு அறை, அதிநவீன புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சை கட்டமைப்பு, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் விரிவாக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.
