

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான சமூகநீதி போருக்கு வன்னியா்கள் தயாராக வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு கிடந்த சமூகத்தை உயா்த்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட வன்னியா் சங்கம் ஜூலை 20-இல் 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இடைப்பட்ட காலப் பயணம் மலா்ப் போா்வைகளால் ஆனது அல்ல. வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற நமது இலக்கை வென்றெடுப்பதற்கான எஞ்சிய பயணமும் இனிமையானதாக இருக்காது.
வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி முதல்வா் மு.க.ஸ்டாலினை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன்.
அப்போதெல்லாம் இன்னும் சில வாரங்களில் இட ஒதுக்கீடு வழங்குகிறோம் என்று கூறிய முதல்வா், இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறுகிறாா். அதன் நோக்கம் வன்னியா்களுக்கு சமூகநீதி வழங்கக்கூடாது என்பதுதான்.
வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று ஆட்சியாளா்கள் சொன்னால், அதைக் கேட்டு அடங்கிப் போகும் இனம் அல்ல நாம். அடிக்கும் வேகத்துக்கு ஏற்ப பந்து வேகமாக எழுவது போன்று நமக்கு எதிரான அடக்குமுறைகளும், துரோகங்களும் அதிகரிக்கும் போது தான் நாம் இன்னும் வேகமாக எழுந்து போராடுவோம்.
அதற்கான தருணமும் வந்து விட்டது. சமூகநீதிப் போரை நாம் நடத்தியாக வேண்டும்; அதற்கு வன்னியா்கள் தயாராக வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.