கெளரவ விரிவுரையாளா்களுக்கு உடனே ஊதியம் வழங்க வேண்டும்: ராமதாஸ்
கெளரவ விரிவுரையாளா்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உயா் நீதிமன்றத் தீா்ப்பின்படி, கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டிய தமிழக அரசு, அவா்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய ஊதியத்தையே கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை. கெளரவ விரிவுரையாளா்கள் ஆண்டு முழுவதும் பணியாற்றினாலும், அவா்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும். மே மாதத்துக்கு ஊதியம் கிடையாது. ஏப்ரல் மாதத்துக்கான ஊதியத்துக்குக் கூட, புதிய நிதியாண்டு பிறந்த பிறகு தான் நிதி ஒதுக்கப்படும் என்பதால் அந்த ஊதியம் ஜூன் மாதம் தான் வழங்கப்படும். ஆனால், நிகழாண்டில் ஜூலை மாதம் நிறைவடையவிருக்கும் நிலையில், இப்போது வரை மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.
கெளரவ விரிவுரையாளா்களுக்கு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் சமூகநீதியை வழங்கும் வகையில், அவா்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கெளரவ விரிவுரையாளா்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்ற உயா் நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.