/

9 சதவீதம் அதிகரித்த பிண்ணாக்கு ஏற்றுமதி

9 சதவீதம் அதிகரித்த பிண்ணாக்கு ஏற்றுமதி

News image
Updated On :15 மார்ச் 2024, 6:13 pm

கடந்த பிப்ரவரியில் இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் அமைப்பு (எஸ்இஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்து சுமாா் 5,15,704 டன் பிண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி 4,71,770 டன்னாக இருந்தது. மதிப்பீட்டு மாத ஏற்றுமதியில் சோயா பிண்ணாக்கு 3,47,905 டன்னாகவும், ராப்சீட் பிண்ணாக்கு 1,44,372 டன்னாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த பிண்ணாக்கு ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்து 44,90,055 டன்னாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இது 37,60,329 டன்னாக இருந்தது. 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலக்கட்டத்தில் 7.87 லட்சம் டன்னாக இருந்த சோயாபீன் பிண்ணாக்கு ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 19.34 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் ராப்சீட் பிண்ணாக்கு ஏற்றுமதி 20.48 லட்சம் டன்னிலிருந்து 20.40 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து தென் கொரியா இறக்குமதி செய்த பிண்ணாக்கின் அளவு 787,909 டன்னாகக் குறைந்துள்ளது. இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 8,80,615 டன்னாக இருந்தது. அப்போது இந்தியாவிலிருந்து 8,85,146 டன் பிண்ணாக்கு இறக்குமதி செய்த வியத்நாம் நடப்பு நிதியாண்டின் அதே காலகட்ட்தில் 3,94,660 டன் பிண்ணாக்கு மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. அதே போல், தாய்லாந்துக்கான இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி 6,84,419 டன்னிலிருந்து 6,04,782 டன்னாகக் குறைந்துள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் வங்கதேசத்துக்கான பிண்ணாக்கு ஏற்றுமதி 7,79,558 டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4,48,528 டன்னாக இருந்தது. இந்திய சோயா பிண்ணாக்கை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக ஈரான் உருவாகி வருகிறது. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் பிப்ரவரி காலகட்டத்தில் 3,946 டன்னாக இருந்த அந்த நாட்டுக்கான சோயா பிண்ணாக்கு ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 3,41,206 டன்னாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.