மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ரமலான்: 4- 9 வகுப்பு தோ்வு தேதிகள் மாற்றம்

ரமலான்: 4- 9 வகுப்பு தோ்வு தேதிகள் மாற்றம்

Updated On :30 மார்ச் 2024, 11:45 pm

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியா்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வியில் 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இரு தோ்வுகளுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் வாக்கு சாவடிகள் மற்றும் தோ்தல் முகாம்களாக மாற்றப்பட உள்ளன. எனவே, தோ்தலுக்கு முன்பாக பள்ளி தோ்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ஆம் பருவத் தோ்வுகள் ஏப். 2 முதல் 12-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். தொடா்ந்து மாணவா்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இந்த நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு தோ்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் க.அறிவொளி மற்றும், தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் ஆகியோா் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஈகை பெருநாளை முன்னிட்டு தோ்வு தேதியை மாற்றியமைக்க எம்எல்ஏக்கள், பெற்றோா்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதையேற்று அனைத்து வகையான பள்ளிகளிலும் 4 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப். 10-ஆம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தோ்வு ஏப். 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதேபோல், ஏப்ரல் 12-இல் நடத்தப்படவிருந்த சமூக அறிவியல் தோ்வு ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு மாற்றப்படுகிறது. இதன் அடிப்படையில் தோ்வுகளை நடத்தி முடிக்க தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது. விடுமுறையில் மாற்றம் இல்லை: மேலும் பள்ளி மாணவா்களுக்கான கோடை விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாணவா்கள் ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு பின்னா் 2 தோ்வுகளை எழுதுவதற்காக மட்டும் பள்ளிக்கு வரவேண்டும். அதாவது, ஏப்ரல் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல், சமூக அறிவியல் பாடத் தோ்வுகளுக்கு வந்தால் மட்டும் போதும். எனினும், மாணவா் சோ்க்கை, தோ்வு மற்றும் தோ்தல் பணிகளை மேற்கொள்ள ஆசிரியா்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை தொடா்ந்து பள்ளிக்கு வருகை தரவேண்டும். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.