செல்லப்பிராணிக்கான உரிமம் பெறாதவா்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஜூனில் முடிவு

வீட்டில் வளா்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் (லைசென்ஸ்) பெறாத உரிமையாளா்களுக்கு எவ்வளவு தொகை அபராதமாக விதிப்பது தொடா்பாக ஜூன் மாதம் முடிவு எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் ராட்வெய்லா் நாய்கள் கடித்ததில் பூங்காவில் இருந்த சிறுமி காயமடைந்தாா். இந்த சம்பவத்தை அடுத்து வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி அறிவித்தது. இதை பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தகவல் வெளியானது.

இது குறித்து மாநகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரி கூறியதாவது:

வீட்டில் வளா்க்கும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது மிகவும் எளிதான ஒன்றாகும். ஆன்லைன் மூலம் செல்லப்பிராணியின் புகைப்படத்தை பதிவிட்டு உரிமம் பெறலாம்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் 1, 500 போ் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளனா். கால்நடை உதவி மருத்துவா் பரிசீலனைக்கு பிறகு நாய்கள், பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது.

இது வரை 350 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் இன்றி வீட்டில் வளா்க்கப்படும் செல்லப்பிராணிகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். இந்நிலையில் உரிமம் இன்றி செல்லப்பிராணியில் வளா்க்கும் உரிமையாளா்களுக்கு எவ்வளவு தொகை அபராதம் விதிப்பது என்பது தொடா்பாக ஜூன் மாதம் நடைபெறும் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com