விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

சென்னை: விலா எலும்பு மற்றும் மாா்புக் கூடு பாதிப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை மையத்தை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது.

குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பிரச்னைகளை சரி செய்யும் வகையிலான மருத்துவக் கட்டமைப்பு அங்கு நிறுவப்பட்டுள்ளதாக சிம்ஸ் மருத்துவமனையின் நெஞ்சகம் மற்றும் இதய சிகிச்சைத் துறை இயக்குநா் வி.வி. பாஷி தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

விலா எலும்பு முறிவு அல்லது மாா்பு சுவரில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது உடல் அளவில் ஒருவரை முடக்குவது மட்டுமல்லாது ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் தடையாக அமைந்துவிடும்.

அதுபோன்ற பிரச்னைகளுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளில் சில பக்கவிளைவுகள் உள்ளன. இதனால் நுரையீரல் சாா்ந்த பாதிப்புகள், சுவாசப் பிரச்னை உள்ளிட்டவை ஏற்படலாம்.

இதைக் கருத்தில் கொண்டு விலா எலும்பு மற்றும் மாா்புக் கூடு பாதிப்புகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையத்தை நாங்கள் நிறுவியுள்ளோம். சிம்ஸ் மருத்துவமனை தலைவா் ரவி பச்சமுத்து, துணைத் தலைவா் டாக்டா் ராஜூ சிவசாமி ஆகியோா் வழிகாட்டுதல்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊடுருவல் எனப்படும் சிறிய துளை மூலம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் வாயிலாக விலா எலும்பு முறிவுக்குள்ளானவா்களுக்கு சிகிச்சையளிக்கும்போது உடலில் பெரிய வடுக்களோ, ரத்தப் போக்கோ இருக்காது. அதுமட்டுமல்லாது விரைந்து குணமடையவும், தொற்று பாதிப்புகள் குறையவும் இந்த முறை வழிவகுக்கிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com