உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறையும்

உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறையும்

சென்னை: தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாள்கள் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: புதன் முதல் சனிக்கிழமை (மே 15 முதல்18) வரை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும். மேலும் கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பையொட்டி இருக்கக்கூடும்.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 100.4 முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகக் கூடும். இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 96.8 முதல் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கும். கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 91.4 முதல் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டியே வெப்பநிலை இருக்கக்கூடும்.

மழைக்கான எச்சரிக்கை: குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 15-18) வரை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.

திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூா் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு (ஃபாரன்ஹீட்டில்): வேலூா்-102.74, திருத்தணி-102.2, ஈரோடு-101.48.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com