யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி

சென்னை: யூ டியூப் சேனல் ஒன்றுக்கு தான் கொடுத்த பேட்டி கேலிக்குள்ளானதால் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 23 வயது பட்டதாரி பெண் ஒருவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு சென்றபோது யூடியூப் சேனல் ஒன்றுக்கு காதல் தொடர்பாக இரட்டை அர்த்தங்களுடன் பேட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பரவி, அந்தப் பெண்ணை பலர் கேலி, கிண்டல்கள் செய்து பதிவிடத் தொடங்கினர்.

பெற்றோர் இல்லாத நிலையில், சகோதரரின் பராமரிப்பில் இருந்த அந்தப் பெண், தான் அளித்த பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்துவிடுமோ என்ற பதற்றத்திலும், மன உளைச்சலிலும் இருந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவர் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி வரும் அவரிடம் இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், அந்த யூடியூப் சேனலுக்கு முதலில் பேட்டி தர மறுத்ததாகவும், அனுமதி இல்லாமல் விடியோவை வெளியிட மாட்டோம் என அவர்கள் கூறியதற்கு மாறாக தற்போது செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த யூடியூப் சேனலை நடத்தி வந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராம் (21), உதவியாளர் யோகராஜ் (21), பேட்டி எடுத்த அண்ணா நகரைச் சேர்ந்த ஸ்வேதா (31) ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com