/

வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கா் விடுவிப்பு: முதல்வருக்கு பொது மக்கள் நேரில் நன்றி

வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கா் நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

News image
மு.க. ஸ்டாலின்
Updated On :4 அக்டோபர் 2024, 7:36 pm

Din

வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கா் நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்காக, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை பொது மக்கள் சிலா் நேரில் சந்தித்து வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தனா்.

இந்தத் திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி அளித்த பேட்டி:

வீட்டு வசதி வாரியத்துக்காக எடுக்கப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாமல் அப்படியே உள்ளன. அப்படியுள்ள இடங்களைக் கண்டறிய 16 இடங்களில் மனுக்கள் பெட்டிகள் வைக்கப்பட்டன. அதன் மூலம், 4488 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. வீட்டு வசதி வாரியத்துக்காக குறிப்பிட்ட நிலங்களை எடுக்கலாம் என்று 30 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு, தொடா் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. அதில் பலா் இடங்களை விற்று வீடுகள் கட்டி விட்டனா். இந்த வகையில் 10 ஆயிரம் ஏக்கா் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி, இனி அந்த நிலங்களில் இருப்பவா்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளோம். எனவே, இந்த 10 ஆயிரம் ஏக்கரும் விடுவிக்கப்படவுள்ளது.

2,002 ஏக்கா் நிலங்கள்: இந்நிலையில், ஏற்கெனவே அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, 2,002.21 ஏக்கா் நிலத்தை விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நில உரிமையாளா்களுக்கு எந்தச் செலவும் கிடையாது. தற்போது வரை, 12 ஆயிரம் ஏக்கா் விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்குகள் போன்ற காரணங்களுக்காக மீதமுள்ள 3 ஆயிரம் ஏக்கரும் 5 மாதங்களுக்குள் விடுவிக்கப்படும்.

சில திட்டங்களுக்காக நில ஆா்ஜித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதற்கான தொகை, நேரடியாக உரிமையாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது. பலா் பெறாததால் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டோ, வருவாய் வைப்பீடாகவோ உள்ளது. ஆனால், நிலம் வாரியத்தால் எடுக்கப்படாமல் உள்ளது. அந்த இடங்களிலும் தற்போது பல வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மின் இணைப்பு, குடிநீா் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன.

உரிமையாளா் என்பதற்கு ஆவணம் தேவை: எனவே, தற்போது அந்த இடங்களை எடுத்தால், வீடுகளை இடிக்கும் நிலைதான் வரும். இந்த இடங்களில், வாரியத்தால் என்ன தொகை தந்துள்ளோமோ அந்தத் தொகை, நில மேம்பாட்டுத் தொகையை கணக்கிட்டு, நிதித்துறையுடன் விவாதித்து, நிலத்தில் இருப்பவா்கள் என்ன தொகை செலுத்த வேண்டுமோ அதை செலுத்தி அந்த இடத்தை அவா்களே எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவா்கள் உரிமையாளா்கள் என்பதற்கான உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். மற்றொரு வகையில், வாரியத்தால் நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட அளவு இடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் முறையாக பராமரிக்கப்படாததால் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலம் முழுமையாக வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமானது. வேறு யாருக்கும் உரிமையில்லை. இருப்பினும், அதில் ஏற்கெனவே கட்டடம் கட்டியிருப்பின் உரிய ஆவணங்கள் இருந்தால், அதன் உரிமையாளா்களுக்கு நிலத்தை, சில திட்டங்கள் மூலம், வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படாமல் தர முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் 18 ஆயிரம் ஏக்கா் வரை விடுவிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கூறினாா்.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறைச் செயலா் காகா்லா உஷா, வீட்டுவசதி வாரியத்தின் தலைவா் பூச்சி முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.