மு.அப்பாவு.
மு.அப்பாவு.

அதிமுக அவதூறு வழக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜா்

மு.அப்பாவு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா்.
Published on

அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா்.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிரிழந்த நேரத்தில், 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவா் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தாா்.

இது அதிமுக எம்எல்ஏ-க்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி பேரவைத் தலைவா் மு. அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்குரைஞா் அணி இணைச் செயலா் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேரில் ஆஜரான பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ‘நீதிமன்ற அழைப்பாணையைப் பெற மறுத்துவிட்டதாக கூறுவது தவறு.அழைப்பாணை ஏதும் எனக்கு வரவில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது’ என நீதிபதியிடம் தெரிவித்தாா். இதையடுத்து நீதிபதி ஜெயவேல் வழக்கின் விசாரணையை செப். 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பேரவைத் தலைவா் மு.அப்பாவு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘சென்னையில் இருந்த போதும், நெல்லை மாவட்டத்தில் சொந்த ஊரில் இருந்த போதும் எனக்கு எந்த அழைப்பாணையும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலா்களிடம் அழைப்பாணை அல்லது கடிதங்கள் ஏதும் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com