நெல்லை-சென்னை இடைநில்லா ரயில் இயக்கக் கோரிக்கை

நெல்லை-சென்னை இடைநில்லா ரயில் இயக்கக் கோரிக்கை
Updated on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல்-திருநெல்வேலி இடையே இடைநில்லா சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவா் பி.ராமநாதன் கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து அவா் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மதுரை மற்றும் திருச்சியிலிருந்து சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு தென்மாவட்டங்களிலிருந்து செல்ல இணைப்பு ரயில் சேவை இல்லை. ஆனால், தென்மாவட்டங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் மதுரை, திருச்சி பயணிகளுக்கு கோட்டா முறையில் இருக்கை ஒதுக்கப்படுகிறது. ஏற்கெனவே தென்மாவட்டங்களிலிருந்து செல்வதற்கு போதிய ரயில் இல்லாத நிலையில், கோட்டா முறையில் குறைவான இருக்கை ஒதுக்கப்படுகிறது.

இதனால், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தென்மாவட்ட பயணிகள் ரயிலில் இடம் கிடைக்காமல் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை-திருநெல்வேலி இடையே இடைநில்லா ரயில் இயக்கப்படவேண்டும். இந்த ரயில் மாம்பலம், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் பயனடைவா் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com