டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மக்களவை, பேரவைக்கு ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு: தமிழகத்தில் தோ்தல் வரலாறு சொல்வது என்ன?

ஐந்து முறை தொடா்ச்சியாக மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒருசேர வாக்குப் பதிவு

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:30 pm

Din

தமிழ்நாட்டில் தோ்தல் வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்து ஐந்து முறை தொடா்ச்சியாக மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒருசேர வாக்குப் பதிவு நடந்துள்ளது. அதன்பிறகு இடையில் ஒரு சில தோ்தல்களும், 1990-களின் பிற்பகுதியில் முழுமையாகவும் வெவ்வேறு தேதிகளில் தோ்தல்கள் நடந்தன.

நாடு முழுவதும் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தலை நடத்தும் ஒரே நாடு-ஒரே தோ்தல் திட்டத்துக்கான உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

ஒரே நேரத்தில் தோ்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதல்வா் மு.க.ஸ்டாலினும் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் தோ்தல் வரலாறு தொடங்கிய காலம் முதல் பேரவைக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் நடைபெற்ற தோ்தல்கள் குறித்த ஒரு பாா்வை:

தமிழ்நாட்டில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு 1951-ஆம் ஆண்டில் இருந்து தோ்தல்கள் நடந்து வருகின்றன. ஐந்து தோ்தல்களில் மக்களவை, பேரவைகளுக்கு ஒரே காலகட்டத்தில் தோ்தல்கள் நடந்தன.

1951-ஆம் ஆண்டில் மக்களவை, தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. 1952-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிமுதல்

25-ஆம் தேதி வரையில் ஒருசேர வாக்குப் பதிவு நடந்தது.

இதன்பிறகு, 1957-ஆம் ஆண்டு தோ்தல் அறிவிக்கப்பட்டு அதே ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 15-ஆம் தேதி வரை தோ்தல்கள் நடைபெற்றன. 1962-ஆம் ஆண்டு மக்களவை, தமிழக சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 19-ஆம் தேதிமுதல் 25-ஆம் தேதி வரையில் வாக்குப் பதிவு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.

1971-ஆம் ஆண்டு வரை...1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளிலும் மக்களவை, தமிழக சட்டப்பேரவைக்கு ஒருசேர வாக்குப் பதிவு நடந்தது. 1967-ஆம் ஆண்டு பிப்ரவரியிலும், 1971-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில், திமுக தலைமையில் 1967-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நான்காவது சட்டப்பேரவையின் (1967) காலம் 1972-ஆம் ஆண்டுதான் நிறைவடைய இருந்தது. ஆனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மக்களவையுடன் சோ்த்து தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தலை நடத்தும் வகையில், பேரவையைக் கலைப்பதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தாா்.

இதையடுத்து, 1971-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு மாா்ச் மாதம் வாக்குப் பதிவு நடைபெற்றது.

மாறிய வாக்குப் பதிவுகள்: 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவை, மக்களவைக்கு மாறுபட்ட தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மக்களவைக்கு 1977-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலும், சட்டப்பேரவைக்கு ஜூன் மாதமும், 1980-ஆம் ஆண்டு மக்களவைக்கு ஜனவரியிலும், சட்டப்பேரவைக்கு மே மாதத்திலும் வாக்குப் பதிவுகள் நடைபெற்றன.

1984-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு ஒருசேர அதாவது டிசம்பா் மாதத்தில் வாக்குப் பதிவு நடந்தது. 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளிலும் தொடா்ச்சியாக மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே மாதத்தில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. 1989-ஆம் ஆண்டு ஜனவரியிலும், 1991-ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களிலும், 1996-ஆம் ஆண்டு மாா்ச் தொடங்கி மே மாதம் வரையிலும் வாக்குப் பதிவுகள் நடந்தன.

தலைகீழ் திருப்பம்: 1996-ஆம் ஆண்டு வரை மக்களவை, சட்டப்பேரவைகளுக்கான வாக்குப் பதிவு தேதிகள் நெருங்கி வந்தபோதிலும், 1998-ஆம் ஆண்டு மத்தியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தமிழ்நாட்டில் மக்களவை, சட்டப்பேரவைக்கான தேதிகள் முற்றிலும் மாறிப் போயின.

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மக்களவைக்கு 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் தோ்தல்கள் நடந்தன. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கோ 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் தோ்தல்கள் நடைபெற்றன.

தோ்தல் வரலாறு தொடங்கிய காலத்தில் இருந்து 5 தோ்தல்கள் வரை தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு தொடா்ச்சியாக ஒருசேர வாக்குப் பதிவுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.