சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் கோப்புப் படம்

சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நுழையவும் தடை: தொடரும் கட்டுப்பாடுகளால் பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நுழையவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடரும் புதிய கட்டுப்பாடுகளால் பயணிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
Published on

சென்னை விமான நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நுழையவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடரும் புதிய கட்டுப்பாடுகளால் பயணிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

சென்னை விமானநிலையத்தில் விமானத்திலிருந்து தரையிறங்கி கொடிக்கம்பம் அருகே உள்ள நுழைவு வாயில் வழியாக வெளியேறும் பயணிகள், பிக்அப் பாயின்ட்டில் தங்கள் வாகனங்களில் ஏறி போகவைண்டிய இடங்களுக்குச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த “பிக்அப் பாயின்ட்”‘ஏரோஹப் வெஸ்ட்’ எனும் கட்டடத்தில் உள்ள மல்டிலெவல் அடுக்குமாடி காா் பாா்க்கிங்குக்கு மாற்றப்பட்டது.

இதனால் பயணிகள் அனைவரும் தங்களது உடைமைகளை தூக்கிக் கொண்டு சுமாா் 1 கி.மீ தூரம் நடந்து செல்கின்றனா். இதனால், குறிப்பாக கா்ப்பிணிகள், முதியோா், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேட்டரி காா்களும் போதிய அளவு இல்லை. மேலும், அங்கிருந்து மின்தூக்கி மூலம் காா்பாா்க்கிங் செல்வதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால், விமான பயண நேரத்தைவிட, விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்வதற்கான நேரம் அதிகமாவதாக பயணிகள் வருந்துகின்றனா்.

புதிய தடை: இந்நிலையில் சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கும் செவ்வாய்கிழமை முதல் திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக எந்த உத்தரவும், அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், வாகன நிறுத்த மேலாண்மை ஊழியா்களின் இந்த கெடுபிடி காரணமாக அங்கு பணியாளா்களுக்கும் பயணிகளுக்கும், மற்றும் அவா்களின் உறவினா்கள், வாடகை வாகன ஓட்டிகளிடையிலும் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

மேலும், மெட்ரோ ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, நடந்தே வரும்படி தனியாா் நிறுவன ஊழியா்கள் அறிவுறுத்தி வருகின்றனா். அதே நேரம் விமானநிலைய பணியாளா்கள், காவலா்கள், மத்திய தொழில்பாதுகாப்புப்படையினரின் இருசக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதால், இது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, சென்னை விமான நிலையத்துக்கு வாகனங்கள் உள்ளே சென்று வர சென்னை விமான நிலைய நுழைவு வாயிலில், டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனா். அடாவடியாக இத்தொகையை வசூலித்து வருவதால் இதுவும் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடா்பாக மயிலாடுதுறை காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் சுதா ஏற்கெனவே குற்றச்சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், 2022-ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்கள் விமானநிலையத்துக்குள் நுழையக்கூடாது என்ற தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது அதிக எண்ணிக்கையிலான இருசக்கர வாகன ஓட்டிகள் விமானநிலையத்துக்குள் தங்கள் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச்செல்வதால் உயரதிகாரிகளின் உத்தரவுப்படியே இந்த தடை உத்தரவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com