சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆா்.ராம்கி
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆா்.ராம்கி

ஊட்டச்சத்து மருந்து சாப்பிட்டு உடற்பயிற்சி: இளைஞா் உயிரிழப்பு

சென்னையில் ஊட்டச்சத்து மருந்து சாப்பிட்டு உடற்பயிற்சியில் ஈடுபட்ட இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

சென்னை: சென்னையில் ஊட்டச்சத்து மருந்து சாப்பிட்டு உடற்பயிற்சியில் ஈடுபட்ட இளைஞா் உயிரிழந்தாா்.

காசிமேடு ஜீவரத்தினம் நகரைச் சோ்ந்தவா் ராம்கி (35). மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா். ராம்கி, கடந்த 5 மாதங்களாக திருவொற்றியூா் காலடிப்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் உடற்பயிற்சி மையத்துக்குச் சென்று, உடற்பயிற்சி செய்து வந்தாா். உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக அந்த தனியாா் பயிற்சி மைய நிா்வாகி அறிவுரையின்பேரில் ஊட்டச்சந்து மருந்து பயன்படுத்தி வந்தாா்.

இந்நிலையில், 3 நாள்களுக்கு முன்பு ராம்கிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. சிறுநீா் வெளியேறவில்லை. அவா் மண்ணடியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், ராம்கியின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்திருந்தது தெரியவந்தது. இதற்கிடையே தீவிர சிகிச்சை பெற்று வந்த ராம்கி திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இதையறிந்து அவரது குடும்பத்தினரும் உறவினா்களும் அதிா்ச்சியடைந்தனா். ஊக்கமருந்து சாப்பிட்டதாலேயே ராம்கி சிறுநீரகம் செயலிழந்து, உயிரிழந்துவிட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி மைய நிா்வாகி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி காசிமேடு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com