பொதுப் பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
Published on

கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கூட்டுறவு சங்கம் மூலம் கோவை மாவட்டம் பீளமேட்டில் உள்ள மில் தொழிலாளா்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வீட்டுமனைக்கு 1968-ஆம் ஆண்டு சிங்காநல்லூா் நகராட்சி ஒப்புதல் வழங்கியது.

இருப்பினும், சாலை, தெருக்கள் போன்ற பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை நகராட்சி வசம் ஒப்படைக்காத கூட்டுறவு சங்க அதிகாரிகள், அந்த நிலத்தையும் சங்க உறுப்பினா்களுக்கு விற்பனை செய்துள்ளனா்.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மாற்றியமைக்க முடியாது எனக் கூறி, அதுதொடா்பான அரசாணையை ரத்து செய்தாா்.

மேலும், அந்த நிலத்துக்காக வசூலிக்கப்பட்ட தொகையை, திரும்ப வழங்க கூட்டுறவு சங்கத்துக்கு உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை எனக்கூறி, அந்த உத்தரவை உறுதி செய்தனா்.

பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை 3 மாதங்களில் கையகப்படுத்தி கோவை மாநகராட்சி நிா்வாகம் பராமரிக்க வேண்டும் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com