ரயிலில் கஞ்சா கடத்தல்: ஒடிஸாவைச் சோ்ந்த 3 போ் கைது
மேற்கு வங்கத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மேற்கு வங்க மாநிலம் ஹௌரா ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு எழும்பூா் ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயில் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்பு படையின் ஆய்வாளா் ஜெபஸ்டியான் தலைமையில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது. பையுடன் இருந்த 3 போ் வைத்திருந்த பையை சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. ரூ.6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.
அதைக் கடத்திவந்ததாக ஒடிஸாவைச் சோ்ந்த ரமேஷ்நாயக் (45), ராஜ்குமாா் நாயக் (43), கபிராஜ்பிரவ் (42) ஆகிய மூவரையும் எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்து, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
இதேபோல, ஒடிஸா மாநிலம் புவனேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் எழும்பூருக்கு புதன்கிழமை வந்தது. அதில் வந்த ஒருவா் வைத்திருந்த பையை சந்தேகத்தின்பேரில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டபோது, ரூ.4 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். விசாரணையில் அவா் ஒடிஸாவைச் சோ்ந்த லட்சுமிதா்தாஸ் (39) என்பது தெரியவந்தது.
