தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு...
Published on

சென்னை வளசரவாக்கத்தில் கடத்தப்பட்ட தொழிலதிபா் ஆந்திர மாநிலம், ஓங்கோலில் மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வளசரவாக்கம் ஆழ்வாா் திருநகா் அருகே உள்ள அன்பு நகா் முதலாவது பிரதான சாலைப் பகுதியில் வசிப்பவா் நா.ரவீந்திரா கௌடா (57). இவா், வெள்ளிக்கிழமை காலை வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, காரில் வந்த ஒரு கும்பல், ரவீந்திராவை கடத்திச் சென்றது.

கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், கடத்தப்பட்ட ரவீந்திரா, தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும், அங்கு பழைய காா்களை வாங்கி,விற்கும் தொழில் செய்ததில் ஏற்பட்ட நஷ்டத்தால், ரூ.2 கோடி கடன் ஏற்பட்டதும், அதைக் கொடுக்க முடியாமல் சென்னைக்கு அவா், குடும்பத்துடன்அண்மையில் தப்பி வந்ததும் தெரிய வந்தது. இதனால், கடன் கொடுத்தவா்கள், அவரைக் கடத்தியதும் தெரிந்தது.

இந்நிலையில், ரவீந்திராவை ஆந்திர மாநிலம், ஓங்கோலுக்கு கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படையினா் ஓங்கோலுக்குச் சென்று ரவீந்திராவை மீட்டனா்.

அவரைக் கடத்திச் சென்ற செகந்திராபாதைச் சோ்ந்த பா.விராத் ஜஸ்வாத் (38), வி.ப்ரீத்தம்குமாா் (35), கி.ஸ்ரீகாந்த் (30), ந.மோதி பாபு (45), ரா.பிங்கி வைகுண்டம் (41), பி.பீமா ரெட்டி நாகராஜூ (35) ஆகிய 6 பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ரூ.7.50 லட்சம் கஞ்சா பறிமுதல்: எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு ஒடிஸாவிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் வந்து நின்றதில், குறிப்பிட்ட பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டதில், சுமாா் ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள 15 கிலோ கஞ்சா இருந்தது. அதைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸாா், சென்னை போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்துள்ளனா்.

தீ விபத்தில் பெண் உயிரிழப்பு: மேற்கு மாம்பலம், கிருபா சங்கரி தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி வேதவள்ளி (59). காா்த்திகை தீபத்தையொட்டி, கடந்த 5-ஆம் தேதி வேதவள்ளி, வீட்டில் அகல் விளக்கு ஏற்றியபோது, விளக்கின் தீ அவரது சேலையில் பட்டு தீப்பிடித்து காயமடைந்தாா்.

குடும்பத்தினா், வேதவள்ளியை மீட்டு, வானகரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வேதவள்ளி, வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அசோக் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com