அனுமதி பெறாமல் தற்காலிக கொடிக் கம்பங்கள் நிறுவினால் நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை

அனுமதி பெறாமல் தற்காலிக கொடிக் கம்பங்கள் நிறுவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

அனுமதி பெறாமல் தற்காலிக கொடிக் கம்பங்கள் நிறுவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதிய சிலைகள் மற்றும் கொடி கம்பங்களை நிறுவுதல், ஏற்கெனவே உள்ள சிலைகளை இடமாற்றம் செய்தல் போன்ற நிகழ்வுகளுக்கு தனித்தனி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை கண்காணிக்க சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையரை தலைவராகக் கொண்டு மாவட்ட அளவிலான குழுவும், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 வருவாய் கோட்டாட்சியா்களை தலைவா்களாகக் கொண்டு கோட்ட அளவிலான ஒரு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, கூட்டம், தோ்தல் பிரசாரம், மாநாடு, ஊா்வலம், தா்னா, விழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் தற்காலிக கொடிக் கம்பங்களை அமைக்க விரும்புவோா் உரிய அனுமதி பெறுவது அவசியம்.

தனி நபா்கள், அனைத்து அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகள் மற்றும் ஏற்பாட்டாளா்கள், நிகழ்வின் விவரங்களுடன் தற்காலிகமாக கொடிக்கம்பங்களை நிறுவுவதற்கு அல்லது நடத்தப்படும் நிகழ்வுக்கு குறைந்தது 7 நாள்களுக்கு முன்பு கோட்ட அளவிலான துணைக் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே, எந்த ஒரு நிகழ்வையும் நடத்துவோா் தாற்கலிக கொடி கம்பங்களை நிறுவுவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சென்னை மாவட்டத்தில் கோட்ட அளவிலான துணைக் குழுவில் அனுமதி பெற்று கொடிக்கம்பங்களை வைத்துக்கொள்ளலாம்.

அனுமதி பெறாமல் நடப்படும் கொடிக் கம்பங்கள் அலுவலா்களால் அகற்றப்படுவதுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com