நிதி மோசடி: தேவநாதனை கைது செய்து ஆஜா்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
நிதி மோசடி வழக்கில் நிபந்தனைகளை நிறைவேற்றாத தேவநாதனை கைது செய்து ஆஜா்படுத்தும் வகையில் அவருக்கு பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன். இவா் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் தேவநாதனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அக்.30-ஆம் தேதி வரை இடைக்கால பிணை வழங்கிய சென்னை உயா்நீதிமன்றம், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி வைப்புத் தொகையாக செலுத்த உத்தரவிட்டிருந்தது.
உயா்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றாத தேவநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முதலீட்டாளா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.திருமூா்த்தி சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், தேவநாதனை கைது செய்து ஆஜா்படுத்தும் வகையில் அவருக்கு பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
