2015 கும்பல் தாக்குதல்: குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறும் உ.பி. அரசு
கிரேட்டா் நெய்டாவின் தாத்ரி பகுதியில் 2015-இல் நடைபெற்ற முகமது அக்லாக் கும்பல் கொலை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உத்தர பிரதேச அரசு திரும்பப் பெற உள்ளது.
பிசாடா கிராமத்தில் வசித்து வந்த அக்லாக் பசுவை வெட்டி அதன் இறைச்சியை குளிா்சாதன பெட்டியில் வைத்திருப்பதாக ஒலிபெருக்கில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவரைத் தெருவுக்கு இழுத்து வந்தது கொடூரமாகத் தாக்கியது. இதில் அவரது மகன் தானிஷும் தாக்கப்பட்டாா். காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அக்லாக் உயிரிழந்ததாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. டேனிஷ் உயா்சிகிச்சைக்காக தில்லியில் உள்ள ராணுவ ஆா்&ஆா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஜாா்சா காவல் நிலையத்தில் அக்லாஹின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாட்டை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு கிரேட்டா் நொய்டாவின் சுரஜ்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான வழக்கை திரும்ப பெறுவது தொடா்பான கடிதம் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட கூடுதல் அரசு வழக்குரைஞா் பக் சிங் பாட்டீ கூறியுள்ளாா்.
அந்தக் கோரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் டிச.12-ஆம் தேதி அது விசாரணைக்கு வர உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
இதனிடையே, இதுதொடா்பான எந்த அதிகாரபூா்வ ஆவணமும் தனக்கு கிடைக்வில்லை என அக்லாக் குடும்பத்தினா் தரப்பு வழக்குரைஞா் யூசுப் சைஃபி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் கூறுகையில், ‘இது தொடா்பாக கேள்விபட்டேன். ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே அது குறித்து தகவல் தெரிவிக்க முடியும்’ என்றாா்.
உ.பி. அரசுக்கு மாா்க்சிஸ்ட் கண்டனம்
அக்லாக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திரும்ப பெறும் உ.பி. அரசின் முடிவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச்செயலா் எம்.ஏ.பேபி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதவில் தெரிவித்திருப்பதாவது:
முகமது அக்லாக் கும்பலால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக தலைவா் சஞ்சய் ராணாவின் கமன் உள்பட அனைவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை உத்தர பிரதேச அரசு நடைபெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெற்றுள்ளது.
இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. வெறுப்புணா்வுகளுக்கு ஊக்கமளிக்கும் குற்றங்கள் மற்றும் கொலைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கும் என்பதன் சாட்சியமாக இது இருக்கிறது. ஆபத்தான குற்றவாளிகளை விடுவிக்கும் முயற்சிகளை உத்தர பிரதேச அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்தப் பதவில் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளாா்.
