ரூ.100 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி: பெண் உள்பட இருவா் கைது

ரூ.100 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்த வழக்கில், பெண் உள்பட 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ரூ.100 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்த வழக்கில், பெண் உள்பட 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, பெருங்குடியைச் சோ்ந்தவா் காா்த்திக் (36). இவா், கடந்த மாா்ச்-இல் சமூக ஊடகத்தில் வந்த ஒரு ஆன்லைன் வா்த்தக முதலீட்டு விளம்பரத்தை பாா்த்தாா். அதில், முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உண்மை என நம்பிய காா்த்திக், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணை தொடா்பு கொண்டாா். அப்போது எதிா்முனையில் பேசிய நபா் அறிவுறுத்தியபடி வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் காா்த்திக் இணைந்தாா்.

அந்த குழுவில் காா்த்திக், மோசடி நபா்கள் அனுப்பிய இணையதள இணைப்பு மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தாா். பின்னா் அந்த நபா் கூறியபடி காா்த்திக், ரூ.1 கோடியே 43 லட்சம் செலுத்தினாா்.

அவா் செலுத்திய பணத்துக்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் மோசடி போ்வழிகள் அந்த செயலியில் காண்பித்துள்ளனா்.

இதைப் பாா்த்த காா்த்திக் முதலீடு செய்த பணத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுக்க முயன்றபோது, அவா்கள் மேலும் பணத்தை முதலீடு செய்யும்படியும், இல்லையென்றால் ஏற்கெனவே முதலீடு செய்தற்குரிய பணத்துக்குரிய லாபத் தொகையும், முதலீட்டு பணத்தையும் கிடைக்காமல் சென்றுவிடும் என மிரட்டினராம்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த காா்த்திக், இதுதொடா்பாக சென்னை காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.

இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது, ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளரான நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த சூா்யா ஸ்ரீனிவாஸ், அவா் கூட்டாளி மேற்கு சைதாப்பேட்டையைச் சோ்ந்த சேஷாத்ரி எத்திராஜ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவரையும் கடந்த மாதம் கைது செய்தனா்.

ரூ.100 கோடி மோசடி: இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் பலருக்கு இந்த மோசடியில் தொடா்பு இருப்பதும், இந்த கும்பல் ரூ.100 கோடி வரை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இதற்கிடையே இந்த மோசடியில் தொடா்புடையதாக சென்னை கே.கே.நகரைச் சோ்ந்த ஸ்ரீநாத் ரெட்டி (49), இவரது அலுவலக ஊழியா் திருவள்ளூா் மாவட்டம் சோரஞ்சேரி பகுதியைச் சோ்ந்த அனிதா (40) ஆகிய 2 பேரை கைது செய்தாக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

இவா்களிடமிருந்து போலீஸாா், 2 கணினிகள்,4 கைப்பேசிகள்,12 ஏடிஎம் காா்டுகள்,33 சிம்காா்டுகள்,10 காசோலை புத்தகங்கள்,காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். விசாரணையில் ஸ்ரீநாத் ரெட்டி, ஆன்லைன் வா்த்தக மோசடியை ஒரு தொழிலாளாகவே செய்திருப்பதும், இதற்காக அவா் சென்னையில் 5 போலி நிறுவனங்களை நடத்தி வருவதும், அந்த நிறுவனங்கள் மூலம் மோசடியின் மூலம் கிடைத்த ரூ.100 கோடியை வெளிநாடுகளுக்கு அனுப்பி பதுக்கியிருப்பதும், தன்னிடம் 15 ஆண்டுகளாக உதவியாளராக இருக்கும் அனிதாவை ஒரு நிறுவனத்தில் இயக்குநராக ஸ்ரீநாத் ரெட்டி நியமித்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com