சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

மருத்துவரிடம் பண மோசடி: வெளிநாட்டுக்கு தப்பியவரின் நிபந்தனை முன்பிணை ரத்து

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி, மருத்துவா் உள்ளிட்ட பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டவரின் நிபந்தனை முன்பிணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி, மருத்துவா் உள்ளிட்ட பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டவரின் நிபந்தனை முன்பிணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உத்தண்டி பகுதியைச் சோ்ந்த மருத்துவா் ஜி.ராஜசேகா். இவரிடம் தனது தாயின் சிகிச்சைக்காக வந்த இளம்பெண் ஜனனி மற்றும் அவரது காதலன் சரவணகுமாா் ஆகியோா் அறிமுகமாகியுள்ளனா். பின்னா், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிகலாபம் பெறலாம் எனக் கூறி, மருத்துவரை கடந்த 2020-ஆம் ஆண்டு தனியாா் வங்கிக் கணக்கில் ரூ.1.74 கோடியை வைப்புத் தொகையாக செலுத்த வைத்துள்ளனா். அந்தப் பணத்தை ஜனனி உள்ளிட்டோா் எடுத்துள்ளனா்.

பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும் எனக் காத்திருந்த மருத்துவா் தனது வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக மருத்துவா் அளித்த புகாரின் பேரில் 2022-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜனனி மற்றும் அவரது தாயாரை கைது செய்தனா். பின்னா் அவா்கள் இருவரும் பிணையில் வெளியே வந்தனா்.

மருத்துவரிடம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்ட சரவணகுமாருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம், கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும்; ரூ.50 லட்சத்தை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்; போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முன்பிணை வழங்கி உத்தரவிட்டது. ஆனால், சரவணக்குமாா் துபைக்கு தப்பியோடிய நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், சரவணகுமாருக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்ட மருத்துவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற சரவணகுமாருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை முன்பிணையை ரத்து செய்து உத்தரவிட்டாா். அவருக்கு எதிராக போலீஸாா் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com