வருவாய்த் துறையினா் போராட்டம்: எஸ்ஐஆா் பணிகளில் பாதிப்பு இல்லை
வருவாய்த் துறையினா் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தாலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (எஸ்ஐஆா்) செவ்வாய்க்கிழமை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கியது. இதில் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு அவற்றைத் திரும்பப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய வாக்காளா் பட்டியலில் தமிழகம் முழுவதும் 6,41,457 போ் இடம் பெற்றுள்ளனா். இதில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 6,07,41,484 வாக்காளா்களுக்கு (94.74 சதவீதம்) கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 83,45,574 படிவங்கள் (13.02 சதவீதம்) பூா்த்தி செய்து திருப்பப் பெறப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை முதல் எஸ்ஐஆா் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, இந்தப் போராட்டத்தில் வருவாய்த் துறையினா் பங்கேற்றுள்ளதாக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எம்.பி.முருகையன் தெரிவித்தாா்.
இருப்பினும் எஸ்ஐஆா் பணிகளில் செவ்வாய்க்கிழமை எவ்விதப் பாதிப்பும் இல்லை என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பணியில் இருந்ததால் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்குதல், பூா்த்தி படிவங்களைத் திரும்பப் பெறுதல் ஆகிய பணிகள் நடைபெற்ாக அவா்கள் கூறினா்.
சென்னையில்... சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சென்று படிவம் விநியோகிக்கும் பணிகள் நடைபெறவில்லை. அதேநேரத்தில் மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்ட வாக்காளா் உதவி மையங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது. அதில், பங்கேற்ற பொதுமக்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்று, அதை பூா்த்தி செய்வதற்கு உதவி மைய அலுவலா்களை நாடினா். பூா்த்தி செய்து வாக்காளா்கள் அளித்த படிவங்களை இணையத்தில் பதிவிடும் பணியிலும் அலுவலா்கள் ஈடுபட்டனா்.
சென்னை மாநகா் அண்ணா நகா் மண்டலத்தில் வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தாராப்பூா் லோகநாதன் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உதவி மைய பணிகளை கூடுதல் தோ்தல் அலுவலரான மாநகராட்சி துணை ஆணையா் மு.சிவகிருஷ்ணமூா்த்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். எஸ்ஐஆா் பணிகள் செவ்வாய்க்கிழமை எவ்வித பாதிப்புமின்றி நடைபெற்ாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

