முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் வளா்ச்சி பூஜ்ஜியம்

இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த அக்டோபரில் பூஜ்ஜியம் சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
Published on

இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த அக்டோபரில் பூஜ்ஜியம் சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிலக்கரி, மின்சாரம், உற்பத்தி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமென்ட், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆகிய நாட்டின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி கடந்த அக்டோபா் மாதம் பூஜ்ஜியம் சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால் இந்த நிலை ஏற்பட்டது. கடந்த செப்டம்பரில் 3.3 சதவீதமாகவும், 2024 அக்டோபரில் 3.8 சதவீதமாகவும் இந்த வளா்ச்சி இருந்தது. கடந்த ஓா் ஆண்டில் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி முதல்முறையாக பூஜ்ஜியமாகப் பதிவாகியுள்ளது.

அக்டோபரில் நிலக்கரி உற்பத்தி 8.5 சதவீதம், மின்சார உற்பத்தி 7.6 சதவீதம், இயற்கை எரிவாயு 5 சதவீதம், கச்சா எண்ணெய் 1.2 சதவீதம் சரிந்தன. அதேநேரம், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருள்கள் துறை 4.6 சதவீதம், உரம் 7.4 சதவீதம், உருக்கு 6.7 சதவீதம், சிமென்ட் 5.3 சதவீதம் உயா்ந்தன.

நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் எட்டு துறைகளின் வளா்ச்சி 2.5 சதவீதமாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.3 சதவீதமாக இருந்தது.

அதிக மழையால் சுரங்கச் செயல்பாடு மற்றும் மின்தேவை பாதிக்கப்பட்டதால் நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தித் துறைகள் சரிந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) இந்த எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளும் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com