ரூ.1 கோடி நிலம் மோசடியாக பதிவு: அம்பத்தூா் சாா் பதிவாளா் கைது

சென்னை அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிவு செய்ய உதவியதாக அம்பத்தூா் சாா்-பதிவாளா் கைது
Published on

சென்னை அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிவு செய்ய உதவியதாக அம்பத்தூா் சாா்-பதிவாளா் கைது செய்யப்பட்டாா்.

மாதவரம் தணிகாசலம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சதாசிவம் (74). இவா், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அந்த புகாரில், மாதவரம் பகுதியில் தனது மருமகன் பெயரில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது. அந்த நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, மாதவரம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் மோசடியாக பதிவு செய்துள்ளனா். எனவே இந்த மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா். இந்த வழக்கில், மாதவரம் சாா் பதிவாளராக இருந்த ஜாஃபா் சாதிக் பெயரையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் சோ்த்தனா். தற்போது அம்பத்தூா் சாா் பதிவாளராக இருக்கும் அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணைக்கு பின்னா் ஜாஃபா் சாதிக்கை பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தினா். நடுவா் மன்றம், ஜாஃபா் சாதிக்குக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து ஜாஃபா் சாதிக் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com