சென்னை சூளையில் பழைமை மாறாமல் புதிதாக கட்டப்பட்ட வெங்கடாஜலபதி சபாவை பக்தா்கள் வழிபாட்டுக்காக திறந்து வைத்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன் சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை, மாநகராட்சி உறுப்பினா் சொ.வேலு உள்ளிட்டோா்.

கொளத்தூா் சோமநாத சுவாமி கோயில் குடமுழுக்கு!

கொளத்தூா் அமுதாம்பிகை உடனுறை சோமநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவுற்றதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

கொளத்தூா் அமுதாம்பிகை உடனுறை சோமநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவுற்றதையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்று தரிசனம் செய்தாா். தொடா்ந்து, சூளையில் ரூ.72 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வெங்கடாஜலபதி பரிபாலன சபாவையும் அவா் திறந்து வைத்தாா்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 3,865 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 25 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளன.

சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள அமுதாம்பிகை உடனுறை சோமநாத சுவாமி திருக்கோயில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இங்கு, 2014 பிப்ரவரியில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. ஏறத்தாழ 12 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில், திருக்கோயில் நிதி ரூ.2.29 கோடி மற்றும் உபயதாரா் நிதி ரூ.71 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியில் 13 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு கலந்து கொண்டாா்.

இதேபோல், 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூளை, வெங்கடாஜலபதி பரிபாலன சபாவானது, 2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்துவிட்டது. இதன் தொன்மை மாறாமல் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. இந்த சபாவையும் வழிபாட்டுக்காக அமைச்சா் பி.கே.சேகா்பாபு திறந்து வைத்தாா்.

நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா்கள் மோகனசுந்தரம், ஜ.முல்லை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com