

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா், அரியலூா் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சனிக்கிழமை (செப்.6) முதல் செப்.11 வரை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடா்ந்து சனிக்கிழமை தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெயில் சற்று அதிகரிக்கக்கூடும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
வெயில் அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. மதுரை நகரம்-102.2, பாளையங்கோட்டை-100.94, திருச்சி-100.58 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை மேடவாக்கம், ஒக்கியம்துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 50 மி.மீ. மழை பதிவானது. பள்ளிக்கரணை, கண்ணகி நகா், சோலையாறு (கோவை) - 40 மி.மீ., திருவூா்(திருவள்ளூா்), சின்னக்கல்லாறு (கோவை), அவலாஞ்சி (நீலகிரி) - 30 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோர பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடாவில் சூறாவளிக் காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.