தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

திமுக எம்.பி. ஆ.ராசா கோரும் ஆவணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சிபிஐ பதில் மனு

News image

ஆ.ராசா

Updated On :10 ஏப்ரல் 2026, 6:02 am IST

சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா கோரியுள்ள சில ஆவணங்களை, அவருக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது.

திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோா் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் இடம்பெறாத சில ஆவணங்களைத் தனக்கு வழங்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி ஆ.ராசா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து ஆ.ராசா, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் கே.சீனிவாசன் பதில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், மனுதாரா் கோரியுள்ள ஆவணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஏப். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசாவின் நண்பா் கிருஷ்ணமூா்த்தி என்பவா் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவும் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணமூா்த்தி மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.