பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

தொகுதி அலசல் ஆவடி : தக்க வைக்க திமுக தீவிரம்!

News image

சா.மு.நாசர் (திமுக) - https://www.instagram.com/avadinasarofficial/

Updated On :14 ஏப்ரல் 2026, 12:04 am

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகள், திருநின்றவூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகள், திருவேற்காடு நகராட்சியில் உள்ள 18 வார்டுகள் மற்றும் நடுகுத்தகை, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி ஆகிய ஊராட்சிகள் அடங்கும். பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது, ஆவடி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

சிறப்புகள்... ஆவடி பகுதியில் டேங்க் பேக்டரி தொழிற்சாலை, படைத் துறை உடைத் துறை தொழிற்சாலை, மத்திய வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், என்ஜின் தொழிற்சாலை, வாகனக் கிடங்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி நிறுவனம், இந்திய விமானப் படை பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைகள், அண்ணனூர் ரயில்வே பணிமனை, இந்திய உணவுக் கழகம் அமைந்துள்ளன. மேற்கண்ட பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் ஆவடியை "குட்டி இந்தியா' என்று அழைக்கின்றனர். மேலும், பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த திருமுல்லைவாயலில் மாசிலாமணீஸ்வரர் கோயில், திருநின்றவூரில் இருதயாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.

சமூக நிலவரம்: அதிக அளவில் பட்டியலினத்தவரும், அடுத்ததாக வன்னியர், நாயுடு, நாடார், யாதவர், சிறுபான்மையினர் உள்ளிட்ட சமூகத்தினரும் வசித்து வருகின்றனர்.

நீண்ட கால பிரச்னைகள்: ஆவடி ரயில் நிலையத்தில் கூடுதலாக அடிப்படை வசதிகளை உருவாக்கி அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் ஆவடி சிடிஹெச் சாலை} நேரு அங்காடியை இணைக்கும் வகையில் உள்ள இருப்புப் பாதை பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். ஆவடியில் நவீன வசதியுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். 13 ஆண்டுகளுக்கு மேல் விரிவாக்கம் செய்யாமல் கிடப்பில் கிடக்கும் பாடி முதல் திருநின்றவூர் வரை சிடிஹெச் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவடி சத்தியமூர்த்தி நகர் துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். ஆவடி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வர வேண்டும். ஆவடியில் உள்ள அனைத்து ஏரிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். திருமுல்லைவாயல் பகுதியில் பேருந்து நிலையம் அமைத்த வேண்டும். திருமுல்லைவாயல், கோயில்பதாகை கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பத்திரப் பதிவு செய்ய அம்பத்தூர் செல்ல வேண்டியதுள்ளது. இதை மாற்றி ஆவடி அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய வழிவகை செய்தால், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். பட்டாபிராம் டைடல் பூங்காவில் கூடுதலாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டும். திருநின்றவூர், திருவேற்காடு பேருந்து நிலையங்களைத் தரம் உயர்த்த வேண்டும்.

தேர்தல் களத்தில்... இத்தொகுதியில் 2011-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் எஸ்.அப்துல் ரஹீம், 2016 -ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மா.பா.பாண்டியராஜன், 2021- ஆம் ஆண்டு திமுக சார்பில் சா.மு.நாசர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான சா.மு.நாசர் (திமுக), அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக எம்.ராஜசிம்ம மகேந்திரா, நாம் தமிழர் கட்சி சார்பில் புனிதா சண்முகம், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரமேஷ்குமார் உள்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.

சா.மு.நாசர் (திமுக): 2021-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இவர் ஆவடியில் பிறந்து வளர்ந்து திமுகவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். தற்போது திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலராக உள்ளார். ஆவடி நகராட்சியாக இருந்தபோது 10 ஆண்டுகள் நகர்மன்றத் தலைவராக நாசர் பணியாற்றியவர்.

பழகுவதற்கு எளிமையானவர் என்பதால் இவர் மீது தொகுதி மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. திமுக அமைச்சரவையில் பால் வளத் துறை அமைச்சராகவும் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர், திருவேற்காடு நகராட்சிகள் மற்றும் கருணாகரச்சேரி, நடுகுத்தகை, நெமிலிச்சேரி ஊராட்சிப் பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் வளர்ச்சி திட்டப் பணிகளைச் செய்து முடித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாமல் இருந்த டைடல் பூங்கா, சேக்காடு சுரங்கப்பாதை, அண்ணனூர் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். எனவே, இவர் செய்து முடித்துள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் திமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

எம்.ராஜசிம்ம மகேந்திரா (பாஜக): அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த எம்.ராஜசிம்ம மகேந்திரா போட்டியிடுகிறார் இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது பாஜக திருவள்ளூர் மாவட்டத் தலைவராக உள்ளார். இவருக்கு ஆதரவாக அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் இணைந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தவெக, நாம் தமிழர் வேட்பாளர்கள்: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரமேஷ்குமார் போட்டியிடுகிறார். இவர், கட்சித் தலைவர் விஜய்யின் செல்வாக்கு மற்றும் பகுதி இளைஞர்களின் துணையுடன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் புனிதா சண்முகம் போட்டியிடுகிறார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கொள்கைகள், வாக்குறுதிகள், தான் வெற்றி பெற்றால் தொகுதிக்கு செய்யவுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

களத்தில் 20 பேர் போட்டியிட்டாலும், தொகுதியைத் தக்கவைக்கும் முனைப்பில் திமுக தீவிரமாக உள்ளது. பாஜக வேட்பாளர் கூட்டணியின் பிரதான கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கியை நம்பி களத்தில் இறங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.