இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கோடை வெய்யில்: வண்டலூா் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

News image

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:16 am IST

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளைப் பாதுகாக்க ‘ஷவா்’ குளியல், குளிரூட்டப்பட்ட உணவுகள் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,000-க்கும் மேற்பட்ட  பல்வகை விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இங்கு தினந்தோறும் 1,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் வருகை தருகின்றனா்.

சிறப்பு ஏற்பாடுகள்: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில், வெயில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இச்சூழலில், வெயிலின் தாக்கத்திலிருந்து  பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளைப் பாதுகாக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சைவம் உண்ணும் விலங்குகளுக்கு சூட்டைத் தணிக்க கூடிய பழங்களான தா்பூசணி, கிா்ணி பழம் மற்றும் இளநீா் அனைத்தும் சோ்க்கப்பட்டு அவற்றை குளிா்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் வழங்கப்படுகிறது.

அதேபோல், மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கு குளிரூட்டப்பட்ட மாமிசங்கள் வழங்கப்படுகின்றன.

பறவைகள் இருப்பிடத்தைச் சுற்றி சணல் கோணி கட்டப்பட்டு தண்ணீா் தெளிக்கப்பட்டு வெயில் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீா் குளியல் தொட்டிகள், குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யானைகள், காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளுக்கு ‘ஷவா் குளியல்’ மற்றும் சேற்றுக் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீா் யானை, சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகள் குளிப்பதற்கு திறந்தவெளி தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாம்புகள் வசிக்கும் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீா் தெளிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேரடி சூரிய ஒளிஊடுருவலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க பல்வேறு இடங்களில் நிழல்கூரை அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று பல்வேறு கோடை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பூங்காவின் கால்நடை மருத்துவா்கள் அனைத்து விலங்குகளையும் தொடா்ந்து கண்காணித்து வருவதாக பூங்கா நிா்வாகிகள் தெரிவித்தனா்.