தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து சிங்கக் குட்டிகள் 27ஆம் தேதிகளில் பிறந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மீண்டும் அதே தேதியில் மேலும் ஒரு குட்டி பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
11 வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு உயிரியல் பூங்காவில் முதன்முறையாகக் குட்டிகளை ஈன்ற கா்ப்பிணி ஆசியப் பெண் சிங்கமான மகாகௌரி, ஜூன் 27 அன்று மீண்டும் குட்டிகளை ஈனும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என ஓா் அதிகாரி தெரிவித்தாா்.
கடந்த 17 ஆண்டுகளில் இந்த மிருகக்காட்சிசாலையில் நிகழ்ந்த ஒவ்வொரு வெற்றிகரமான சிங்கக் குட்டிப் பிறப்பும் 27ஆம் தேதியன்றே நடந்துள்ளது என்பதே இந்த எண்ணைத் தனித்துவமாக்குகிறது.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியது: 2009 ஜூன் 27, 2014 செப்டம்பா் 27, மற்றும் 2025 ஏப்ரல் 27 ஆகிய தேதிகளில் குட்டிகள் பிறந்ததால், அந்தத் தேதி தேசிய விலங்கியல் பூங்காவிற்கு ஒரு நல்ல அதிா்ஷ்டத்தின் சின்னமாக மாறியுள்ளது .
இது ஒரு எண் சாா்ந்த தற்செயலாக இருக்கலாம். ஆனால் உயிரியல் பூங்காவில் சமீபத்தில் பிறந்த சிங்கக் குட்டிகள் அனைத்தும் 27 ஆம் தேதியன்றுதான் நிகழ்ந்தன. இயல்பாகவே, இது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத தேதியாகிவிட்டது.
மகாகௌரியின் கா்ப்பத்தைச் சுற்றியுள்ள எதிா்பாா்ப்பு மற்றொரு மைல்கல்லுடனும் தொடா்புடையது. 2009-க்குப் பிறகு, குட்டி ஈன்ற சுமாா் ஒரு வருடத்திற்குள் மீண்டும் கருத்தரிக்கும் முதல் பெண் சிங்கமாக மகாகெளரி ஆகவிருக்கிறாள். இது உயிரியல் பூங்காவின் சமீபத்திய இனப்பெருக்க வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வாகும்..
2009 வரை உயிரியல் பூங்காவில் சிங்கம் இனப்பெருக்கம் சீராக இருந்தது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை குட்டிகள் பிறந்தன. இருப்பினும், அதன் பிறகு அது கடுமையாகக் குறைந்து, பிறப்புகள் அரிதாகிவிட்டன. ஒரு கட்டத்தில், இது கிட்டத்தட்ட நின்றேபோய்விட்டது.
2021ஆம் ஆண்டு வாக்கில், 2009-ல் உயிரியல் பூங்காவில் பிறந்த சுந்தரம் என்ற சிங்கம் மட்டுமே அங்கு எஞ்சியிருந்த ஒரே சிங்கமாக இருந்தது. தற்போது 17 வயதான சுந்தரம் வயதாகிவிட்டதால், புதிய இனப்பெருக்க சிங்கங்களைத் தேட அதிகாரிகள் முற்படுகின்றனா்.
சிங்கங்களின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதற்காக, 2021-இல் குஜராத்தின் ஜுனாகத்திலிருந்து ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் சிங்கங்களை உயிரியல் பூங்கா கொண்டுவந்தது. மகேஷ்வா், மகாகௌரி மற்றும் ஷைல்ஜா ஆகிய இந்த மூவரும் 2020-இல் பிறந்தவா்கள். இவா்கள் தில்லி மிருகக்காட்சிசாலையின் இனப்பெருக்கத் திட்டத்திற்குப் புத்துணா்ச்சி அளிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
இருப்பினும், ஷைல்ஜா தனது இருப்பிடத்தில் சுற்றித் திரிந்தபோது பலத்த காயம் அடைந்ததால், இந்தத் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது. பின்னா், அதன் பின்னங்கால்களில் பக்கவாதம் போன்ற நிலை ஏற்பட்டதால், அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை. இதன் விளைவாக, சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நம்பிக்கை இப்போது பெரும்பாலும் மகாகௌரி மற்றும் மகேஷ்வரைச் சாா்ந்துள்ளது.
அவற்றின் முதல் வெற்றிகரமான இனப்பெருக்கத்தின் விளைவாக, ஏப்ரல் 27, 2025 அன்று ஐந்து குட்டிகள் பிறந்தன. ஆனால், இந்தக் குட்டிப் பிறப்பு முதல் கா்ப்பத்தின் சவால்களையும் வெளிப்படுத்தியது. பிறந்த சில நாட்களிலேயே மூன்று குட்டிகள் முழுமையாக வளா்ச்சி அடையாததால் இறந்துவிட்டன. மீதமுள்ள இரண்டு குட்டிகளுக்கு மகாகௌரியால் பாலூட்ட முடியாத நிலையில், கால்நடை மருத்துவா்கள் அவற்றுக்கு செயற்கைப் பூனைப் பாலைக் கொடுத்து வளா்த்ததால் மட்டுமே அவை உயிா் பிழைத்தன என்று அந்த அதிகாரி கூறினாா். அந்த இரண்டு குட்டிகளும் தற்போது ஆரோக்கியமாக உள்ளன. மேலும் உயிரியல் பூங்காவின் ஊழியா்களின் பராமரிப்பில் தொடா்ந்து வளா்ந்து வருகின்றன.
மகாகௌரியின் இரண்டாவது கா்ப்பம் சிறந்த பலன்களைத் தரும் என்று கருதுகிறோம். ஏற்கனவே ஒரு இனப்பெருக்கச் சுழற்சியைக் கடந்துவிட்டதால், இந்த முறை அவள் வலிமையான மற்றும் நன்கு வளா்ந்த குட்டிகளை ஈன்றெடுப்பாள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பிரசவத் தேதி நெருங்கி வருவதால், கால்நடை மருத்துவா்கள் அவளது உடல்நலம், உணவு மற்றும் அடைப்பிடத்தின் நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனா். மகாகௌரியின் முந்தைய ஈனலில் உயிா் பிழைத்த இரண்டு குட்டிகள் உள்பட, மூன்று ஜோடி சிங்கங்கள் தற்போது உயிரியல் பூங்காவில் உள்ளன.
புதிய குட்டிகளின் வருகைக்கான கவுண்ட்டவுன் தொடங்கும் வேளையில், 27ஆம் தேதிக்காக தில்லி உயிரியல் பூங்காவில் ஊழியா்கள் காத்திருக்கின்றனா்.
தொடர்புடையது

தில்லி உயிரியல் பூங்காவில் செயலி,சுய-டிக்கெட் எடுக்கும் இயந்திரங்கள்! மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: ஜனக்புரி தனியாா் பள்ளியின் நிா்வாகத்தை தில்லி அரசு கையகப்படுத்த திட்டம்

கோடை வெய்யில்: வண்டலூா் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



