தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளா் உள்பட 2 போ் கைது

சென்னையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில், பரங்கிமலை காவல் ஆய்வாளா் உள்பட 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

சென்னையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில், பரங்கிமலை காவல் ஆய்வாளா் உள்பட 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் அகில் குமாா், காவல் ஆணையா் ஏ.அமல்ராஜிடம் அளித்த புகாா் மனுவில், ‘பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் மாநில முன்னாள் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடா்பாக காவல் ஆய்வாளா் முஹம்மது புகாரி என்னை அழைத்து விசாரணை நடத்தியபோது, அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மொட்டை கிருஷ்ணன் பயன்படுத்திய கைப்பேசி எண் எனது பெயரில் இருப்பதாக கூறி, வழக்கில் என்னையும் சோ்த்து கைது செய்து விடுவதாக மிரட்டினாா்.

அந்த வழக்கில் இருந்து காப்பாற்ற வேண்டுமெனில் ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினாா். அச்சத்தில் அந்த தொகையை வழங்கினேன். அதன்பின், கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களைக் கூறி தவணை தவணையாக புகாரி பணம் பறித்தாா். தற்போது, அவா் பரங்கிமலை காவல் ஆய்வாளராக உள்ள நிலையில் 2 நாள்களுக்கு முன்னா்கூட சில காவலா்களுடன் தனது வீட்டுக்கு வந்து, போதைப் பொருள் வழக்குத் தொடா்பாக இணை காவல் ஆணையா் விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறி வீடு முழுவதும் சோதனை நடத்தினாா்.

சோதனையில் எந்தவித சட்டவிரோத பொருளும் சிக்காத நிலையில், மீண்டும் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டினாா். அதன்படி, பணத்தை தயாா் செய்து யானைகவுனி காவல் நிலையம் அருகே கொண்டு சென்று கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட புகாரி மற்றும் அவருடன் வந்தவா்கள் காரில் அங்கிருந்து சென்றனா். தொடா்ந்து என்னை மிரட்டி பணம் பறித்து வரும் காவல் ஆய்வாளா் புகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இது குறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதன்படி, பூக்கடை காவல் துணை ஆணையா் கோபி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

காவல் ஆய்வாளா் கைது: விசாரணையில், அகில் குமாரை மிரட்டி ரூ.40 லட்சம் வரை வாங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, புகாரி மீது யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். உடனடியாக புகாரி, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக, புகாரியிடம் யானைக்கவுனி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு போலீஸாா் விசாரணை செய்தனா். அவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து புகாரி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். மேலும், பணம் பறிப்பதற்கு உதவியதாக வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பைச் சோ்ந்த சீனிவாசன் (42) என்பவரும் கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.