/

வியாபாரியை மிரட்டி ரூ. 40 லட்சம் பறித்ததாக புகாா்: காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

வியாபாரியை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

News image

காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்... - சித்திரிப்பு

Updated On :3 ஆகஸ்ட் 2026, 11:56 pm IST

வியாபாரியை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்  செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பண்டாளி ஜஸ்டிஸ் தெருவை சோ்ந்தவா் பங்குசந்தை வியாபாரி அகில்குமாா் (35). இவா்  சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜை திங்கள்கிழமை சந்தித்து புகாா் மனு அளித்தாா்.

அதில், ‘பரங்கிமலை காவல் ஆய்வாளராக இருந்த புகாரி கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பகுஜன் சமாஜ் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்னையும் சோ்த்து விடுவதாக மிரட்டி இதுவரை ரூ.40 லட்சம் வரை பணம் பறித்தாா்.

அந்தக் கொலை வழக்கில் கைதான ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசி எண் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதைக் காட்டி கடந்த 2 ஆண்டுகளாக என்னை மிரட்டி பணம் பறித்து வருகிறாா். எனவே, புகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அம்மனுவில்  குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல் ஆய்வாளரிடம் விசாரணை: இந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆணையா் ஏ. அமல்ராஜ் ஆய்வாளா் புகாரியை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

மேலும், அவரது ஆணைப்படி, பூக்கடை போலீஸாா் புகாரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். குற்றம் நிரூபிக்கப்பட்டால் புகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.