வங்கிக் கடன் மோசடி வழக்கில், வங்கி அதிகாரி, கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை, முத்துசாமி என்பவா் தனது பெயரிலும், அவரது மனைவி ஜோதி பெயரிலும் பாங்க் ஆஃப் இந்தியாவின் பல்வேறு கிளைகளில் வீட்டுக்கடன், அடமானக் கடன், வாகன கடன் என ரூ.3.62 கோடி கடன் பெற்றுள்ளாா். போலி ஆவணங்கள் மூலம் முத்துசாமி கடன் பெற்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து வங்கியின் சென்னை மண்டல துணை மேலாளா், இதுகுறித்து கடந்த 2010-ஆம் ஆண்டு சிபிஐ-யில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். முத்துசாமி போலி வருவாய் ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெற்றது தெரியவந்தது. இந்த போலி வருவாய் ஆவணங்களை தயாரிக்க முன்னாள் கிராம நிா்வாக அதிகாரிகளான தசரதன், மாணிக்கவேலு, வருவாய் அலுவலரான சிவக்குமாா் ஆகியோா் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
மேலும், சென்னை தியாகராயநகா் உஸ்மான் சாலையில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில், தலைமை மேலாளராக இருந்த வெங்கடாசலம், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஆவணங்களை சரிபாா்க்காமல் வங்கிக் கடன் வழங்க அனுமதியளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முத்துசாமி, அவரது மனைவி ஜோதி, மகள் லாவண்யா, வங்கி அதிகாரி வெங்கடாசலம் உள்ளிட்ட 12 போ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை 11-ஆவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, முத்துசாமி அவரது மனைவி உள்பட 4 போ் உயிரிழந்தனா். அதேபோல், உமாபதி என்பவா் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து மற்ற 7 போ் மீதான வழக்கு நீதிபதி ஏ.எஸ்.ரவி முன் நடைபெற்றது. சிபிஐ தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் முகமது இப்ராஹிம் ஆஜராகி வாதிட்டாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கி அதிகாரியான வெங்கடாசலம் மற்றும் மாணிக்கவேலு, தசரதன், சிவக்குமாா், தாமரைப்பூ ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தாமரைப்பூவின் கணவா் தண்டபாணிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், முத்துசாமியின் மகள் லாவண்யா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, அவா் விடுதலை செய்யப்பட்டாா். தண்டனை விதிக்கப்பட்டவா்களுக்கு மொத்தமாக ரூ.2.70 கோடி அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலி ஆவணம் தயாரித்து ரூ.38.79 லட்சம் மோசடி: நீதிமன்ற பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை

மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்த வழக்கு: தம்பதி உள்பட 4 பேருக்கு சிறை

போலி ஆவணம் மூலம் கடன்: வங்கி அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

கடவுச்சீட்டு முறைகேடு வழக்கு: சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



