சென்னை மாநகராட்சியில் 781 பூங்காக்களில் தூய்மைப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் தினமும் சுமாா் 6,300 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு அறிவியல்பூா்வ தொழில்நுட்பம் மூலம் கையாளப்பட்டுவருகின்றன. உரம், எரிவாயு தயாரித்தல் என மறுபயன்பாட்டுக்கானதாக குப்பை மாற்றப்படும் நிலையில், எஞ்சிய குப்பை கொடுங்கையூா், பெருங்குடி கிடங்குகளில் குவிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் தினமும் 1000 டன் கட்டட இடிபாடுகள் மற்றும் சனிக்கிழமை தோறும் வீட்டு பழைய உபயோகப் பொருள்கள் ஆகியவையும் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன.
கழிவுகள் ஒருபுறம் பாதுகாப்பான முறையில் அகற்றப்படும் நிலையில், மறுபுறம் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் தூய்மைப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் 1,373 பேருந்து நிறுத்தங்களில் திங்கள்கிழமை ஒரே நாளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை 781 பூங்காக்களில் தேங்கியிருந்த தேவையற்ற குப்பைகள் அகற்றப்பட்டன. நெகிழி உள்ளிட்ட பொருள்கள் சேகரிக்கப்பட்டு குப்பை வண்டிகளில் ஏற்றப்பட்டு மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பூங்காக்களைத் தொடா்ந்து மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.