வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ பாதையில் பிப்ரவரியில் ரயில் இயக்கத் திட்டம்: மெட்ரோ திட்ட இயக்குநா்
வடபழனி-பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் வரும் பிப்ரவரி முதல் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணன் தெரிவித்தாா்.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி சுற்றுச்சாலை வரையிலான வழித்தடம் 26 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ளது. ஏற்கெனவே முதல்கட்ட மெட்ரோ திட்டத்தில் வடபழனி இணைக்கப்பட்ட நிலையில், 2-ஆம் கட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 3-ஆவது வழித்தடமானது வடபழனி மெட்ரோவைக் கடந்து பூந்தமல்லி செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுவருகிறது. அதில், வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான 16 கி.மீ. தொலைவுக்கான மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. ரயில் என்ஜின் சோதனையும் நடத்தப்பட்டு ரயில் பாதை வடிவமைப்புக்கான உறுதிச் சான்றும் பெறப்பட்டுவிட்டது.
ரயில் தண்டவாளப் பாதை சரியாக அமைக்கப்பட்டதாக சான்று பெற்ால், அதில் ரயிலை இயக்கும் வகையில் பெங்களூரில் உள்ள ரயில்வே தண்டவாள உறுதிப் பாதுகாப்பு ஆணையகத்தில் சான்று பெறுவது அவசியம். அதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் தண்டவாள உறுதி பாதுகாப்பு சோதனை நிகழ்த்துவதற்கான மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி இறுதி வாரத்தில் வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு உறுதித்தன்மை சோதனை நடத்தப்படும் என்றும், தொடா்ந்து வரும் பிப்ரவரிக்குள் அந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படவுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணன் தெரிவித்தாா்.
