போகி முன்னெச்சரிக்கை: 9 விமான சேவைகள் ரத்து
போகி பண்டிகையால் ஏற்படும் புகை மூட்டத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக புதன்கிழமை (ஜன. 14) 9 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம், கவுல் பஜாா், பொழிச்சலூா், பம்மல் அனகாபுத்தூா் உள்பட சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் பழைய பொருள்களை எரிக்கும்போது ஏற்படும் கடும்புகை மூட்டத்தால், ஓடுபாதை முற்றிலும் மறைக்கப்பட்டு விடும். இதனால், கடந்த ஆண்டுகளைப் போல, நிகழாண்டும் விமான சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், புதன்கிழமை (ஜன.14) அதிகாலை முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதுடன், சில விமானங்கள் காலதாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 11.40-க்கு சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானம், புதன்கிழமை அதிகாலை 3.05-க்கு புணே செல்லும் விமானம், காலை 6.35-க்கு கோவை செல்லும் விமானம், காலை 7.15-க்கு மும்பை செல்லும் விமானம், காலை 8 மணிக்கு தில்லி செல்லும் விமானம் ஆகிய 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய நிா்வாகம் அறிவித்துள்ளது.
தில்லியில் இருந்து புதன்கிழமை அதிகாலை 5.20-க்கு சென்னை வரும் விமானம், காலை 6.35-க்கு மும்பையில் இருந்து வரும் விமானம், காலை 7.10-க்கு புணேயில் இருந்து வரும் விமானம், காலை 9.10-க்கு கோவையிலிருந்து வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து புதன்கிழமை காலை 5.40-க்கு விஜயவாடா செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 8.40-க்கும், காலை 6-க்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாகவும், காலை 9.05-க்கும் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

