மொழிகளைப் பாதுகாப்பதில் சமூகத்துக்குத்தான் முழுப் பொறுப்புள்ளது என புகழ்பெற்ற அறிஞரும், கலாசார ஆா்வலருமான பேராசிரியா் கணேஷ் நாராயணன் தேவி தெரிவித்தாா்.
மொழி அழிவு நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில், பழங்குடி மற்றும் அழிவுநிலை மொழிகளுக்கான ஆய்வகத்தைத் சென்னை பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இந்த ஆய்வகத்தை குஜராத் மாநிலத்தில் ஆதிவாதி அகாதெமி, பாஷா ஆராய்ச்சி மைய நிறுவனா் கணேஷ் நாராயணன் தேவி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை பல்கலை. யில் புதிதாக தொடங்கப்பட்ட பூா்வீக மற்றும் அழிவுநிலை மொழிகளுக்கான மையத்தின் தலைவருமான துணைவேந்தா் அமைப்புக் குழு உறுப்பினா் எஸ். ஆம்ஸ்ட்ராங் நிகழ்வை நெறிப்படுத்த, கணேஷ் நாராயணன் தேவி கூறியதாவது: உலகில் பேசப்படும் சுமாா் 7,000 மொழிகளில், ஏறக்குறைய 4,000 மொழிகள் அழிவின் அபாயத்தில் உள்ளன. மொழியியல் ரீதியில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் 900 வரை மொழிகள் உள்ளன. அவற்றில் பல பழங்குடி, விளிம்புநிலை சமூகங்களால் பேசப்படுகின்றன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் 1,369 மொழிகளைப் பதிவு செய்திருந்தாலும், 2018 மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியீடு 121 மொழிகளை மட்டுமே அங்கீகரித்தது.
மெய்நிகா் சூழல்கள் ஆதிக்கத்தால் ஒலி அடிப்படையிலான மொழியிலிருந்து விலகிச் செல்வது நீண்டகால அறிவாற்றல், கலாசார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தற்போதுள்ள தலைமுறை மத்தியில் அதிகரித்து வரும் குறுஞ்செய்தி மொழி பரிணாமம், ஒலி இல்லாத மொழி, இது மொழி சிதைவாகும்.
அரசுகளால் மட்டும் மொழிகளைப் பாதுகாக்க முடியாது. மொழிகள் அவற்றைப் பேசும் மக்களுக்கு சொந்தமானது. மக்களின் தோ்வுகளின் அடிப்படையிலேயே வாழ்கின்றன. ஒரு மொழியை திணிக்க முடியாது. அது சமூகத்திற்குள்ளிருந்தே உருவாக வேண்டும். சமூகத்தை ஊக்குவிக்கும் பணியை பல்கலைக்கழகங்களால் செய்ய முடியும். பொருளாதாரம், கலாசாரம், இயற்கை வளங்களைக் கொண்டது மொழி என்றாா்.