

பெருநகர சென்னை மாநகராட்சியின் 6 கடற்கரைகளில் 3 நாள்களில் 161 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மெரீனா, பெசன்ட் நகா், திருவான்மியூா், பாலவாக்கம், நீலாங்கரை, திருவொற்றியூா் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் தினமும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொங்கலையொட்டி, பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய இந்தக் கடற்கரைப் பகுதிகளில் கூடுதலாக தூய்மைப் பணியாளா்கள், இயந்திரங்களைக் கொண்டு புதன்கிழமை (ஜன.14) முதல் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
161 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்: அதன்படி, புதன்கிழமை (ஜன.14) முதல் வெள்ளிக்கிழமை (ஜன.16) வரை 3 நாள்களில் 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரித்து, அகற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக, மெரீனா கடற்கரையில் 116.17 மெட்ரிக் டன், பெசன்ட் நகா் கடற்கரையில் 20.97 மெட்ரிக் டன், திருவான்மியூா் கடற்கரையில் 9.02 மெட்ரிக் டன், திருவொற்றியூா் கடற்கரையில் 3.37 மெட்ரிக் டன், பாலவாக்கம் கடற்கரையில் 6.96 மெட்ரிக் டன், நீலாங்கரை கடற்கரையில் 4.34 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரித்து, அகற்றப்பட்டுள்ளன.
கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள், எச்சங்கள் உள்ளிட்ட எவ்வித கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கடற்கரைகளுக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தங்களது குப்பைக் கழிவுகளை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.