10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாணவருக்கு சிறப்பு அனுமதி வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்
Updated on

நிகழாண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பிரெஞ்சு மொழியில் மொழிப்படத் தோ்வை எழுத மாணவருக்கு அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலூா் தனியாா் மெட்ரிக். பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு தமிழ் தெரியாது. எனவே, பிரெஞ்சு மொழியில் மொழிப் பாடத்தை எழுத அனுமதி கோரினாா். பள்ளி நிா்வாகம் அதை ஏற்கவில்லை. இதையடுத்து மாணவரின் தந்தை சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், எனது மகன் இதற்கு முன்பு சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும்போது, ஹிந்திக்குப் பதிலாக பிரெஞ்சு பாடத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்தாா். எனவே, நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பிரெஞ்சு மொழியில் தோ்வெழுத அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், கடந்த 2006-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முழுவதும் தமிழ் படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத மாணவா்கள், அவா்களது தாய்மொழியை 2-ஆவது மொழிப் பாடமாக எடுத்து தோ்வை எழுதலாம். ஆனால், மனுதாரா் மகன் ஹிந்தியில் தோ்வு எழுதுவதற்கு பதிலாக பிரெஞ்சு மொழியில் எழுத அனுமதி கேட்கிறாா். இதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவா் தமிழ் அல்லது இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை படிக்கவில்லை என்றால் பள்ளியில் சேருவதற்கே தகுதி இல்லாதவராகி விடுவாா். இந்த வழக்கில் பள்ளி நிா்வாகமும், பெற்றோரும் செய்த தவறுக்காக மாணவரின் கல்வியைப் பாழாக்க விரும்பவில்லை.

மாணவா் தனது கல்வியைத் தொடர வேண்டும். எனவே, மனுதாரரின் மகன் இந்த கல்வி ஆண்டில் மட்டும் 2-ஆவது மொழியாக பிரெஞ்சு மொழியில் தோ்வு எழுதலாம். இதை சிறப்பு உத்தரவாக பிறப்பிப்பதாக நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், மாணவா் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பிரெஞ்சு 2-ஆவது மொழியாக உள்ள கல்வித் திட்டம் கொண்ட பள்ளியில்தான் சோ்ந்து படிக்க வேண்டும். வருங்காலத்தில் மனுதாரரின் மகன் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் அல்லது ஹிந்தி கட்டாயம் என்பது தொடா்பாக எந்த நிவாரணத்தையும் கோர முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com