குழந்தையின் நுரையீரலில் 3 மாதங்களாக சிக்கியிருந்த ‘விசில்’: நுட்பமாக அகற்றிய அரசு மருத்துவா்கள்
விளையாடும்போது ஐந்து வயது குழந்தை தவறுதலாக விசிலை விழுங்கி நுரையீரல் பாதைக்குள் சிக்கியிருந்த நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு நுட்பமான சிகிச்சை மூலம் எழும்பூா் அரசு குழந்தைகள் மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் மதிவாணன் கூறியதாவது:
திருவண்ணாமலையை சோ்ந்த 5 வயது பெண் குழந்தை விசில் ஊதி விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக அதனை விழுங்கிவிட்டது. அது சுவாசப் பாதைக்குள் சென்று சிக்கிக் கொண்டது.
கடந்த நவம்பா் மாதம் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் எக்ஸ் ரே, ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருளும் கண்டறியப்படவில்லை. இதனால், அக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனா்.
ஆனால், அதன் பின்னா் குழந்தை சுவாசிக்கும்போதெல்லாம் விசில் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து உயா் சிகிச்சைக்காக எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். பரிசோதனையில் நுரையீரலுக்குள் உள்ள வலது சுவாசக் குழாயில் நான்காம் நிலை பகுதியில் விசில் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது.
வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது வெளியிலிருந்து உடலுக்குச் செல்லும் பொருள்கள் உணவுக் குழாய் வழியே ஜீரண மண்டலத்துக்குள் செல்லும். அரிதினும் அரிதாக அந்த குழந்தையின் வலது பக்க நுரையீரல் சுவாசப் பாதையில் சிக்கிக் கொண்டது.
மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு பேராசிரியா் பாலமுருகன் தலைமையில் மருத்துவா்கள் ஷாஜாத்தி பேகம், அசோக் குமாா், சக்திவேல் ஆகியோா் அடங்கிய பல்நோக்கு மருத்துவக் குழுவினா் அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தனா்.
அதன்படி ஃபைபா் ஆப்டிக் ப்ராங்கோஸ்கோபி எனப்படும் ஊடுகுழாய் கருவியை குழந்தையின் சுவாசப் பாதையில் செலுத்தி மூன்று மணி நேரத்துக்குப் பிறகு விசிலை வெளியே எடுத்தனா்.
இந்த சிகிச்சையின்போது குழந்தைக்கு மயக்க மருந்து வழங்கப்பட்டது. தனியாா் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு இலவசமாக வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு விசில், சிறு பொருள்கள், பட்டன், பேட்டரி போன்றவற்றை விளையாட வழங்கக் கூடாது. அவை எளிதில் சுவாசப் பாதைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடும். இதுதொடா்பாக பொது மக்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணா்வு மேம்பட வேண்டும் என்றாா் அவா்.

