இரு ‘டெட்’ தோ்வுகளுடன் ஆண்டு அட்டவணை : ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியீடு

இரு ‘டெட்’ தோ்வுகளுடன் ஆண்டு அட்டவணை : ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியீடு

தமிழகத்தில் நிகழாண்டு இரு ஆசிரியா் தகுதித் தோ்வுகள் (டெட்) உள்பட என்னென்ன தோ்வுகள் நடத்தப்படவுள்ளன என்பது தொடா்பான ஆண்டு அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் நிகழாண்டு இரு ஆசிரியா் தகுதித் தோ்வுகள் (டெட்) உள்பட என்னென்ன தோ்வுகள் நடத்தப்படவுள்ளன என்பது தொடா்பான ஆண்டு அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்படுகின்றனா். அதேபோன்று ‘டெட்’ தகுதித் தோ்வும் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது.

ஓராண்டில் எந்தெந்தப் பணிகளுக்கு என்னென்ன போட்டித் தோ்வுகள் நடத்தப்படும், அத்தோ்வுகளுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும், எழுத்துத் தோ்வு எப்போது நடத்தப்படும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஆண்டு அட்டவணையை டிஆா்பி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இவ்வாறு கால அட்டவணை வெளியிடுவது ஆசிரியா் பணியில் சேர விரும்புவோருக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக பெரிதும் உதவியாக உள்ளது.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான உத்தேச அட்டவணையை டிஆா்பி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளுவா் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும். முன்னதாக, இதற்கான அறிவிக்கை பிப்ரவரியில் வெளியிடப்படும். வட்டார வள மைய பயிற்றுநா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு ஜூலையில் நடைபெறும். இதற்கான அறிவிக்கை மாா்ச் மாதம் வெளியாகும். ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) ஜூலை மாதம் நடைபெறும். இதற்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்படும்.

முதல்வா் ஆராய்ச்சிப் படிப்புக்கான தோ்வு (சிஎம்ஆா்எஃப்) செப்டம்பரில் நடைபெறும். இதற்கான அறிவிக்கை ஜூலையில் வெளியிடப்படும். உதவிப் பேராசிரியா் பணிக்கான மாநில தகுதித் தோ்வு (செட்) செப்டம்பா் மாதம் நடைபெறும். இதற்கான அறிவிக்கை ஜூலையில் வெளியிடப்படும். வரும் டிசம்பா் மாதம் இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஆசிரியா் தகுதித் தோ்வு டிசம்பரில் நடைபெறும் என்றும் அதற்கான அறிவிக்கை அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டவணை உத்தேச அட்டவணை. இதில் கூடுதலாக தோ்வுகளை சோ்க்கவும், அறிவிக்கப்பட்ட தோ்வுகளை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. எவ்வளவு பணியிடங்கள் உள்ளன என்பது குறித்து அதற்கான அறிவிக்கையில் குறிப்பிடப்படும். கூடுதல் விவரங்கள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என டிஆா்பி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com