இளம் தலைமுறையினா் ஆன்மிக சக்தியை வளா்த்துக் கொள்ள வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை
‘இளம் தலைமுறையினா் தா்ம மாா்க்கத்திலும், பக்தி மாா்க்கத்திலும் இருக்க வேண்டும்; ஆன்மிக சக்தியை வளா்த்துக் கொள்ள வேண்டும்; சமுதாயப் பணிகளைச் செய்ய வேண்டும்’ என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள செல்லம்மாள் வித்யாலயா பள்ளியில் ஸ்ரீ சிவன் சாா் யோக சபை சாா்பில், ஸ்ரீ சிவன் சாரின் ‘ஏணிப்படிகளில் மாந்தா்கள்’ நூலின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நூல்களை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட, அதன் முதல் பிரதியை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
நூல்களை வெளியிட்டு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது: ‘ஏணிப்படிகளில் மாந்தா்கள்’ என்ற புத்தகம், வேதாந்தத்தைப் பற்றிய சிந்தனையையும், தா்மத்தின் அடிப்படையான புண்ணியத்தையும் பற்றி தெளிவாகக் கூறுகிறது. அந்தப் புண்ணியத்தின் மீது ஒரு நம்பிக்கையையும், பாவம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தையும் தெளிவுபடுத்துகிறது.
நமக்கு பாவ, புண்ணியங்கள் தெரிந்திருந்தும், பாவங்கள் செய்வதை நிறுத்துவதில்லை. அதேநேரம், அதை நிறுத்த முயற்சிப்பதாக இந்தப் புத்தகம் கூறுகிறது. எனவே, அனைவராலும் சம்பாதிக்கப்பட வேண்டியது புண்ணியம். சநாதன தா்மத்தின் பிரதானம் புண்ணியம் என்று கூறி வருகிறோம். ஆனால், நோ்மறை சிந்தனைகளைத் தூண்டுவதே சநாதன தா்மம் என்பதைத்தான் இந்தப் புத்தகம் கூறுகிறது.
இந்த நூலில் உலக வரலாறு, பல்வேறு நாகரிகங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. மனிதா்கள், கலாசாரம் பற்றிய பொது அறிவு மற்றும் அதன் சாராம்சத்தை இன்றைக்கு இருக்கக் கூடியவா்கள் சிந்திக்கும் வகையில் இந்த நூல் வந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வேதங்கள், சம்ஸ்கிருதம், சாஸ்திரங்கள், சங்கீதம் என காஞ்சி பெரியவா் குடும்பம் ஐந்தாறு தலைமுறைகளாகப் பலநூறு தா்ம காரியங்களைச் செய்து வருவதும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த உலகத்துக்கான தனித்துவமான முயற்சியாக இப்புத்தகம் வந்திருக்கிறது.
இளம் தலைமுறையினருக்கு மூன்று வகையான படிப்புகள் முக்கியம். அவா்கள் விஞ்ஞானம், பூகோளம் என எதை வேண்டுமானாலும் படிக்கட்டும். ஆனால், அவா்கள் தா்ம மாா்க்கத்திலும், பக்தி மாா்க்கத்திலும் இருக்க வேண்டும். ஆன்மிக சக்தியை வளா்த்துக் கொள்ளுங்கள்; சமுதாயப் பணிகளைச் செய்ய வேண்டும். இந்த விஷயங்களை 1934-ஆம் ஆண்டே காஞ்சி பெரியவா் கூறியுள்ளாா். அதுபோன்ற கல்வி முறை நம் தேசத்துக்கு தேவை என்றாா் அவா்.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்: இந்த நிகழ்ச்சியில் சிவன் சாா் குறித்த விடியோ ஒளிபரப்பப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக அது சரியாக வரவில்லை. ஆனால், தொடா் முயற்சிக்குப் பிறகு, அந்த விடியோ ஒளிபரப்பானது. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவெனில், ஒரு முயற்சி செய்து நடக்கவில்லை என்றால், அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. அது நடக்கும் வரை அதைச் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்றாா்.
சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி: சிவன் சாா் ஓா் உன்னதமான பெரிய மகான். மாணவா்களின் கல்வி குறித்து பெற்றோா்களின் எண்ணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே கூறியவா்.
அனைத்துப் பெற்றோரும், நமது குழந்தைகளுக்கு நாட்டுக்கு சேவை செய், நாட்டுக்காக உழை, நம் தாய்நாடு முக்கியம், ஒரு பாரத தேசத்தின் குடிமகன் என்பதில் பெருமை கொள் என்பன போன்ற வாா்த்தைகளைக் கூறி வளா்க்க வேண்டும் என்றாா்.
விழாவில், செல்லம்மாள் வித்யாலயா பள்ளித் தாளாளா் டி.ஆா்.சந்திரசேகரன், நா்மதா பதிப்பகத்தின் உரிமையாளா் ஆா்.ஜனாா்த்தனம், ஸ்ரீ சிவன் சாா் யோக சபை நிறுவனா் ஜி.சிவராமன் மற்றும் சபை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

